சிங்கப்பூரில் ஊழியர்களின் மொத்த ஊதிய வளர்ச்சி 3.9 சதவிகிதமாக உயர்ந்துள்ளது என்று மனிதவளத்துறை அமைச்சகம் (MOM) இன்று (மே.30) அறிவித்துள்ளது.
இது குறித்து CNA வெளியிட்டுள்ள செய்தியில், இந்த உண்மையான ஊதிய வளர்ச்சி என்பது 2021 இல் 1.6 சதவீதமாக இருந்தது, 2020 இல் 1.4 சதவீதமாக இருந்தது. மேலும் 2019 இல் அதாவது.. பெருந்தொற்றுக்கு முந்தைய காலத்தில் 3.3 சதவீதமாக இருந்தது. இந்த நிலையில் தான் தற்போது இது 3.9 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாக MOM குறிப்பிட்டுள்ளது.
“சிங்கப்பூர் பொருளாதாரம் வலுவாக மீண்டு வந்தது மற்றும் ஊழியர்களின் பற்றாக்குறை ஆகிய இந்த 2 காரணிகளும், 2021 இல் தங்கள் ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்த அந்தந்த நிறுவனங்களுக்கு தூண்டுகோலாக அமைந்தது. இதன் விளைவாக, கடந்த ஆண்டு அதிகமான ஊழியர்கள் ஊதிய உயர்வுகளைப் பெற்றனர்” என்று MOM கூறியுள்ளது.
மேலும் “இந்த 2022ம் ஆண்டிலும் ஊழியர்கள் பற்றாக்குறை நிலவும் என்பதால், ஊதிய வளர்ச்சியை ஆதரிக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம், இருப்பினும் எல்லைக் கட்டுப்பாடுகளின் குறிப்பிடத்தக்க தளர்வு காரணமாக, ஓரளவு ஊழியர்களின் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படும்” என்றும் MOM குறிப்பிட்டுள்ளது.
2021ல் சிங்கப்பூரின் பொருளாதாரம் 7.6 சதவீதமாக விரிவடைந்த நிலையில், லாபகரமான நிறுவனங்களின் விகிதம் 2020ல் 63 சதவீதத்தில் இருந்து கடந்த ஆண்டு 75 சதவீதமாக அதிகரித்தது. 2020ல் 59 சதவீதத்துடன் ஒப்பிடும் போது, 2021ல் 70 சதவீத ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு இருந்தது என்றும் MOM தெரிவித்துள்ளது. அதாவது 4-ல் 3 ஊழியர்கள் கடந்த ஆண்டு ஊதிய உயர்வால் பயனடைந்துள்ளனர்.
அதேபோல், நோய்த்தொற்று காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்ட கீழ்க்காணும் துறைகளும், மீண்டும் எல்லைத் திறப்பு மூலம் வளர்ச்சி அடைந்துள்ளது. இதன் புள்ளி விவரங்களையும் MOM வெளியிட்டுள்ளது.
SECTORS | 2020 | 2021 |
Accommodation | -5.3% | 1.7% |
Transportation & Storage | -3% | 2.8% |
Food & Beverages Service | 1.5% | 2.6% |
ஆனால், இதில் வெளிநாட்டு ஊழியர்களும் பயன்பெற்றார்களா என்பது குறித்த தகவலை MOM குறிப்பிடவில்லை. அவர்களுக்கும் ஊதிய உயர்வு கிடைத்ததா என்ற எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. அதேசமயம், சிங்கையில் பணிபுரியும் சில வெளிநாட்டு ஊழியர்களிடம் நாம் பேசிய போது, ‘எங்களுக்கு அதுபோல எந்த ஊதிய உயர்வும் கிடைக்கவில்லை” என்று வேதனையுடன் நம்மிடம் பதிவு செய்தனர்.