மரணம் எந்த அளவிற்கு கொடுமையானது என்பதை அவ்வப்போது உலகில் நடக்கும் சில விஷயங்கள் நமக்கு எடுத்துரைத்துக்கொண்டுதான் இருக்கின்றது. பாவங்கள் பல செய்தவர்களுக்கு தான் இந்த மரணம் விரைவில் வரும் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கும் அதே வேளையில் புண்ணியங்கள் பல செய்து வாழ்ந்துவரும் மனிதர்களும், மழலை மனம் மாறாத பச்சிளம் குழந்தைகளுக்கும் கூட காலனிடம் செல்லும் நாள் விரைவில் வருவது மனதை உலுக்குகிறது.
இதையும் படியுங்கள் : “சிங்கப்பூரில் பாலூட்டும் தாய்மார்களுக்கு பிரத்தியேக நிலையம்”
இன்று நாம் காணவிருக்கும் இந்த பதிவும் அப்படிப்பட்ட ஒன்று தான். கடந்த 17 வருடங்களாக சவுதி அரேபியாவில் உள்ள பிரபலமான அப்துல் லத்தீப் அல் அமீன் என்ற நிறுவனத்தில் ஃபீல்ட் ஆபீஸராக ஜூபைல் கிளையில் பணிபுரிந்து வந்தவர் தான் ஜாஃபிர். உடன் பணியாற்றும் பலருக்கும் மிகவும் பிடித்தமான நபர், மனிதநேயமிக்க பல சேவைகளில் ஈடுபட்டு வந்தவர். மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் ஜுபைல் நகரத்திலேயே சந்தோஷமாக வாழ்ந்து வந்த இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தனது சொந்த ஊரான கோழிக்கோட்டிற்கு விடுமுறைக்கு சென்றுள்ளார்.
அப்போது தனது மனைவி மக்களுடன் எப்போதும் இல்லாத அளவிற்கு உற்சாகத்துடன் உறவினர்கள் வீட்டிற்கு சென்று நலம் விசாரித்து மகிழ்ச்சியோடு தனது நாட்களை கழித்து அவர் மீண்டும் சவுதி அரேபியா திரும்பியுள்ளார். துபாய் வந்த இவர் 15 நாட்கள் தனிமைப்படுத்துதலுக்கு பிறகு மனைவி மக்களுடன் ஜுபைல் பகுதியில் உள்ள வீட்டிற்கு திரும்பியுள்ளார்.
இந்நிலையில் தான் வேளையில், ஜூபைல் பகுதியில் இருந்து ஜிசன் பகுதிக்கு அவருக்கு இடமாற்றம் கிடைத்துள்ளது. உடனடியாக ஜாஃபிர் மட்டும் ஜிசன் சென்று மனைவி மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து முடித்துவிட்டு மீண்டும் ஜுபைல் திரும்பியுள்ளார். புதிய வாழக்கையை நோக்கி பயணம் மேற்கொள்ள இத்தனை நாள் உறவாக பழகிய அக்கம்பக்கம் வீட்டார்களிடம் விடைபெற்று ஜாஃபிர் அவரது மனைவி சப்னா (36), குழந்தைகள் லைஃபா (7), ஸஹ (5) மற்றும் கடைக்குட்டி லுத்ஃபி (3) ஆகியோர் தங்கள் பயணத்தை மேற்கொண்டனர்.
அவர்களுடைய வீட்டு பொருட்கள் முன்னே செல்ல பின்னே இவர்கள் ஐவரும் காரில் சென்றபோது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட கோர விபத்தில் சிக்கி ஐவரும் உயிரிழந்துள்ளனர். புது வாழ்வு நோக்கி பயணித்த ஒரு குடும்பமே உயிரிழந்த செய்தி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.