TamilSaaga

“வெளிநாட்டில் இருந்து சிங்கப்பூருக்கு பெறப்படும் பொருட்கள்” : புதிய வசதிகளை அறிமுகப்படுத்தும் சிங் போஸ்ட் – முழு விவரம்

வெளிநாடுகளிலிருந்து வரி செலுத்த வேண்டிய பொருட்களை பெற்றுக் கொள்ளும் வாடிக்கையாளர்கள் அதற்கான கட்டணத்தை இணைய வழியிலேயே செலுத்தக்கூடிய புதிய வசதியை அறிமுகப்படுத்தி இருக்கிறது சிங்போஸ்ட் (SingPost) என்று அழைக்கப்படும் சிங்கப்பூர் போஸ்ட் லிமிடெட் ….

வெளிநாடுகளில் இருந்து வருகின்ற பொருட்களை பெற்றுக்கொள்ள வரிசையில் காத்திருந்து கட்டணம் செலுத்தும் வாடிக்கையாளர்கள் இனி சிங்போஸ்ட் அறிமுகப்படுத்தியிருக்கிற அலைபேசி செயலி வழியாகவே சரக்கு சேவை வரி ( GST ) ,சுங்க கட்டணங்கள் போன்ற எல்லா கட்டணங்களையும் கட்டிக் கொள்ளலாம்.பொருள் வந்தவுடன் அதற்கான அறிவிப்பினையும் உடனே பெற்றுக் கொள்ளலாம்.

இதுகுறித்து அக்டோபர் 1 அன்று அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார் சிங்போஸ்ட், வருகிற நவம்பர் 1-ஆம் தேதி முதல் வெளிநாட்டு பொருட்களை வீட்டிற்கு கொண்டு வந்து தருகின்ற தபால்காரர் அல்லது தூதஞ்சல் (கூரியர்) பணியாளர் ஆகியோரிடம் பணம் செலுத்த தேவையில்லை என்றும், வாடிக்கையாளர் சேவையை தரம் உயர்த்தும் நடவடிக்கையின் ஒரு பகுதிதான் இது என்றும் தெரிவித்திருக்கிறது.

ஏற்கனவே நடைமுறையில் இருக்கிற வங்கிகள் வழியாக பணம் செலுத்தக்கூடிய GIRO ( General Interbank Recurring Order ) வசதியும் மாற்றம் என்று தொடரும் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.

புதிய – பயன்படுத்திய பொருட்கள், இணையவழி வர்த்தகத்தில்( Online Shopping) வாங்குகிற பொருட்கள், பரிசுப் பொருட்கள் ( gifts ) எதுவாக இருந்தாலும் ஜிஎஸ்டி வரி அதோடுகூட நடைமுறையில் இருக்கிற சுங்க வரி போன்ற செலுத்த வேண்டிய சரியான கட்டணங்களை செலுத்தவேண்டும்.

400 சிங்கப்பூர் டாலர்களுக்கு குறைவான மதிப்புள்ள ஆல்கஹால், புகையிலை தவிர மற்ற பொருட்களுக்கு சரக்கு சேவை வரித் தளர்வுகள் உண்டு. 400 சிங்கப்பூர் டாலர்களுக்கு அதிக மதிப்புள்ள எல்லா பொருட்களுக்கும் மேற்கூறிய அனைத்து வரிகளும் கட்டணங்களும் செலுத்த வேண்டும் என்று தெரிவித்திருக்கிற சிங்போஸ்ட்,தம் வாடிக்கையாளர்கள் பணம் செலுத்துவதற்காகவும், வாடிக்கையாளர் நேரடி தொடர்புக்காகவும் ஒரு அலைபேசி செயலியை ( MobileApp ) அறிமுகப்படுத்தி இருக்கிறது.

வாடிக்கையாளர்கள் அனைவரும் வெளிநாடுகளிலிருந்து பொருட்களை வாங்குவதில் தடை இல்லாத, நேர்மையான,தாமதம் இல்லாத அனுபவத்தைப் பெற தங்களது அலைபேசி செயலியை பயன்படுத்தும்படி சிங்போஸ்ட் கேட்டுக் கொண்டுள்ளது. இந்த அலைபேசியில் பதிவு செய்யும் பொழுது, கட்டணம் செலுத்த வேண்டிய பொருள் சிங்போஸ்ட்டுக்கு கிடைக்கப் பெற்றவுடன், வாடிக்கையாளர் செலுத்த வேண்டிய கட்டணங்கள், வரி உள்ளிட்ட தகவல்களோடு வாடிக்கையாளருக்கு இந்த அலைபேசி செயலிலிருந்து ஒரு குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் அனுப்பப்படுகிறது. அந்த செயலி வழியாகவே 14 நாட்களுக்குள் பணம் செலுத்தி விட்டால் அந்தப் பொருளை பணம் செலுத்தியதில் இருந்து இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் வாடிக்கையாளர் இடத்திலேயே பொருள் கொண்டு சேர்க்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இந்த அலைபேசி செயலியில் பதிவு செய்யாதவர்களுக்கு குறுஞ்செய்தி ,மின்னஞ்சல் மேலும் கடிதம் வழியாகவும் தகவல் தெரிவிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

சரக்கு சேவை கட்டணம் இல்லாத பொருட்களை பெறுவோர், அந்த இறக்குமதி அனுமதி கடிதத்தோடு கப்பலின் கண்காணிப்பு எண்ணையும் ( Tracking Number ) இணைத்து சிங்போஸ்டுக்கு oclgst@singpost.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு பொருட்களை பெறுவதற்கு முன்னரே அறிவிப்பு வந்தவுடன் அனுப்பவேண்டும்.

மேலும் இணைய வழி கட்டணம் செலுத்தும் முறையை சிங்போஸ்ட் அறிமுகப்படுத்தி இருப்பதால், வருகிற டிசம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் நேரடியாக பணம் செலுத்தி பொருட்களை பெற்றுக் கொள்வதற்காக தற்போது நடைமுறையில் இருக்கிற ICA கவுண்டர்களை நிரந்தரமாக மூடுவதற்கும் சிங்போஸ்ட் முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சிங்போஸ்ட் குழுமத்தின் வியாபார மற்றும் தகவல் தொடர்பு அதிகாரி திரு. ராபின் கோ அவர்கள் கருத்து தெரிவிக்கும் போது,

தற்போதைய பட்டுவாடா ( Delivery ) முறைகள் குறித்த வாடிக்கையாளர்களின் கருத்துக்களை கேட்ட பிறகு, அவர்களது அனுபவத்தின் தரத்தை உயர்த்துவதற்காகவே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சிங்கப்பூரர்கள் இப்போது மொபைல் பயன்பாடுகளில் மிகவும் ஆர்வம் உள்ளவர்களாக இருக்கின்றனர்.அதனடிப்படையில் எங்கள் வாடிக்கையாளர்களின் அனுபவத்தை மேம்படுத்த உதவும் ஒரு முக்கியமான திட்டமாக நாங்கள் இந்த சிங்போஸ்ட் அலைபேசி செயலியை பார்க்கிறோம். இதன் வழியாக வாடிக்கையாளர்களுக்கு ஜிஎஸ்டி மற்றும் செலுத்த வேண்டிய கட்டணங்கள் குறித்த தகவல்களை தெரிவிப்பதோடு அல்லாமல், தங்கள் பொருட்களை வாடிக்கையாளர் நேரடியாக கண்காணிக்கவும் வழி செய்து கொடுக்கிறோம். இனி வாடிக்கையாளர்கள் பொருளை பெற்றுக் கொள்வதற்காக பணத்தைத் தயாராக வைத்துக் கொண்டு வீட்டில் காத்திருக்க வேண்டியதில்லை. இணைய வழியில் பணம் செலுத்திவிட்டு பொருள் வரும் போது அதை நேரடியாக பெற்றுக் கொள்ளலாம் .

இது எங்களது வாடிக்கையாளர் சேவையில் ஒரு மைல்கல்லாக அமையும் என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.

Related posts