சிங்கப்பூரில் தனது மனைவியைக் கடத்தி “பெட்ரோல் ஊற்றி கொன்றுவிடுவேன்” என்று மிரட்டிய நபருக்கு இன்று புதன்கிழமை (செப்டம்பர் 29) இரண்டு ஆண்டுகள், இரண்டு மாதங்கள் மற்றும் ஆறு வாரங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இப்பொது 40 வயதாகும் குற்றவாளி, முருகன் நொண்டோ துவாஸ் சோதனைச் சாவடியில் காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவரது மனைவி திருமதி கிருஷ்ணவேணி சுப்பிரமணியம் (40) கடந்த ஜூலை 2, 2019 அன்று இரவு 11 மணியளவில் மீட்கப்பட்டார்.
சம்பத்தின்போது, மலேசிய தம்பதியினரான அவர்கள் அந்த நேரத்தில் ஜோகூர் பாருவுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் இன்று புதன்கிழமை வீடியோ இணைப்பு மூலம் சிங்கப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜரான முருகன், கடந்த வாரம் கடத்தல், குற்றவியல் மிரட்டல் மற்றும் தாக்குதல் உள்ளிட்ட தன் மீது சுமத்தப்பட்ட பல குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். குற்றவாளிக்கு தண்டனை வழங்கும் போது, மாவட்ட நீதிபதி கெஸ்லர் சோ “தனது மனைவியை பொதுமக்கள் முன்னிலையில் கடத்தி அந்த நபர் “வெட்கக்கேடான செயலை” செய்ததாக குறிப்பிட்டார்.
இந்த ஜோடி கடந்த 2007ல் திருமணம் செய்துகொண்டது என்றும் மற்றும் அவர்கள் ஜோகூர் பாருவில் வசிப்பதாக நீதிமன்றம் தெரிவித்தது. மேலும் திருமண வாழ்க்கை புளித்துப்போன நிலையில், முருகன் தனது மனைவியை உடல் ரீதியாக துன்புறுத்தியதாக போலீசார் தங்கள் விசாரணையில் தெரிவித்துள்ளனர். மேலும் மார்ச் 2019ல், முருகன் தனது மனைவிக்கு ஒரு உறவு இருப்பதாக குற்றம் சாட்டினார், ஆனால் அதை அவரது மனைவி மறுத்துள்ளார். இதனையடுத்து அந்த மாதத்தின் பிற்பகுதியில், அவர் ஜோகூர் பாருவில் உள்ள தனது தாயின் வீட்டிற்கு சென்று விவாகரத்து கோரியுள்ளார்.
இதனையடுத்து முருகன் தனது மனைவியுடன் சமாதானம் செய்ய முயன்றுள்ளார். ஆனால் அவரது மனைவி மீண்டும் சேர மறுத்துவிட்டார். இந்நிலையில் கடந்த ஜூலை 2, 2019 அன்று, திருமதி கிருஷ்ணவேணி மலேசியாவில் தனது மருமகளுடன் தனது தொலைபேசியில் பேசியபோது “தனது பணியிடத்தை விட்டு வெளியேறும்போது முருகன் மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்தாக கூறினார்.” முன்னதாக நடந்த விசாரணையில் துணை அரசு வழக்கறிஞர் டெலிசியா டான் கூறுகையில் “குற்றம் சாட்டப்பட்டவர் தனது கையை பின்புறமாக பயன்படுத்தி அந்த பெண்ணின் கழுத்தைப் பிடித்து நெரித்தார் என்றும். பாதிக்கப்பட்டவர் விடுபட சிரமப்பட்டு அழுது கொண்டே உதவிக்காக கூச்சலிட்டார்” என்றும் கூறினார்.
இதற்கிடையில், முருகன், கிருஷ்ணவேணியை பெட்ரோல் ஊற்றி எரித்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். மேலும் காரில் அவரை கூட்டிக்கொண்டு பல இடங்களுக்கு சுற்றியுள்ளார். இறுதியில் ஓல்ட் சோவா சு காங் சாலையில் உள்ள ஒரு கல்லறையில் வாகனத்தை நிறுத்தியுள்ளார். இறுதியாக துவாஸ் சோதனைச் சாவடியில் இருந்தபோது, கிருஷ்ணவேணியை மீட்டு முருகனை போலீசார் கைது செய்தனர்.