TamilSaaga
India's New Aviation Era

2025ல் இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் வர புதிய இரண்டு விமான நிலையங்கள் திறப்பு!

சிங்கப்பூரிலிருந்து இந்தியா: இரண்டு புதிய விமான நிலையங்களின் மூலம் இணைப்பு

இந்தியாவின் வளர்ந்து வரும் பொருளாதாரம் மற்றும் அதிகரித்து வரும் பயணிகள் போக்குவரத்து காரணமாக, நாடு முழுவதும் புதிய விமான நிலையங்கள் கட்டப்பட்டு வருவது நாம் அறிந்ததே. இந்தியாவில் ஏற்கனவே 34 சர்வதேச விமான நிலையங்கள் செயல்பட்டு வரும் நிலையில், 2025-ல் இன்னும் இரண்டு புதிய சர்வதேச விமான நிலையங்கள் திறக்கப்படவுள்ளன என்பது மகிழ்ச்சியான செய்தி!

உத்தரபிரதேசத்தில் சர்வதேச விமான நிலையம் 2025:

பல ஆண்டுகால எதிர்பார்ப்புக்குப் பிறகு, இந்தியாவின் விமானப் போக்குவரத்துத் துறையில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்க உள்ளது. உத்தரபிரதேசத்தில் உள்ள நொய்டா சர்வதேச விமான நிலையம் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 17 அன்று அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட உள்ளது. இந்த புதிய விமான நிலையம், வட இந்தியாவின் விமானப் போக்குவரத்து கட்டமைப்பில் ஒரு முக்கியமான கூடுதலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. முதல் கட்டத்தில் 10 ஏரோபிரிட்ஜ்கள் மற்றும் 25 பார்க்கிங் ஸ்டாண்டுகளுடன் ஒரே முனையம் மற்றும் ஓடுபாதை இருக்கும். ஆரம்பத்தில், விமான நிலையம் தினசரி 65 விமானங்களைக் கையாளும், இதில் 62 உள்நாட்டு, இரண்டு சர்வதேச மற்றும் ஒரு சரக்கு விமானம் அடங்கும்.

மும்பையில் சர்வதேச விமான நிலையம் 2025:

மும்பைக்கு இரண்டாவது சர்வதேச விமான நிலையம் கிடைக்க உள்ளது என்பது மிகவும் மகிழ்ச்சியான செய்தி. பன்வெல் அருகே நவி மும்பையில் அமைந்துள்ள இந்த புதிய விமான நிலையம், ஏப்ரல் 2025 இல் செயல்படத் தொடங்கும். நவி மும்பையில் அமைந்துள்ள புதிய சர்வதேச விமான நிலையம், அதானி ஏர்போர்ட் ஹோல்டிங்ஸ் லிமிடெட் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விமான நிலையம், மும்பை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்களுக்கு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாகும்.

நவி மும்பை சர்வதேச விமான நிலையம் திறக்கப்படுவதால், மும்பையின் சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் ஏற்படும் கூட்ட நெரிசல் குறையும். இதனால், பயணிகள் எளிதாகவும் விரைவாகவும் தங்கள் பயணத்தை மேற்கொள்ள முடியும்.

சிங்கப்பூர் மற்றும் துபாய்க்கு சேவை:

நொய்டா விமான நிலையத்தில் இண்டிகோ மற்றும் ஆகாசா ஏர் ஏற்கனவே தங்கள் செயல்பாடுகளை உறுதிப்படுத்தியுள்ளன. சர்வதேச வழித்தடங்களில் சூரிச், சிங்கப்பூர் மற்றும் துபாய் ஆகிய நகரங்கள் இணைக்கப்படவுள்ளன. அதேசமயம், உள்நாட்டு சேவைகளில் லக்னோ, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், டேராடூன் மற்றும் ஹூப்ளி போன்ற முக்கிய நகரங்கள் இணைக்கப்படும்.

 

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: உங்களை சிங்கப்பூருக்கு நேரடியாக அழைத்துச் செல்லும் !

இந்த விமான நிலையம் ஜூரிச் ஏர்போர்ட் இன்டர்நேஷனல் ஏஜியின் துணை நிறுவனமான யமுனா இன்டர்நேஷனல் ஏர்போர்ட் பிரைவேட் லிமிடெட் மூலம் நிர்வகிக்கப்படுகிறது. உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு, முன்னோக்கிய சேவைகள் மற்றும் பயணிகள் வசதிகளுடன், இந்த விமான நிலையம் இந்தியாவின் வளர்ச்சியை மேலும் வேகப்படுத்தும் என்பதில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்த விமான நிலையங்களின் திறப்புடன் சுற்றுப்புற பகுதிகளில் தொழில் வாய்ப்புகள், வர்த்தகச் சந்தைகள் மற்றும் உள்கட்டமைப்புகள் வளர்ச்சி பெறும். இந்த முன்னெடுப்பு இந்தியாவின் விமானப் போக்குவரத்துத் துறையில் புதிய உச்சங்களை தொட்டுத் தரும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

சிங்கப்பூரில் அன்றாடம் நிகழும் புதுப்புது செய்திகளுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து தமிழ் சாகா சிங்கப்பூர் பக்கத்தில் இணைந்திடுங்கள்!

Related posts