தொற்றுநோய் கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு சிங்கப்பூரில் உள்ள தமிழ் சமூகம் ஞாயிற்றுக்கிழமை இந்து பண்டிகையான தைப்பூசத்தை ஆடம்பரமாகவும் ஆரவாரமாகவும் கொண்டாடி இருக்கிறது.
தமிழ் கடவுளான முருகப்பெருமானை நினைவுகூரும் இந்த திருவிழாவில், பக்தர்கள் தங்கள் தலையில் பித்தளை பானைகளை தூக்கி வந்ததும், கொக்கிகள் மற்றும் சூலங்களால் தங்கள் உடலை குத்திக்கொள்வது மற்றும் அலங்கரிக்கப்பட்ட ‘காவடிகள்’ சுமந்து வந்த நிகழ்வுகளும் நடந்தது.
ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் சிங்கப்பூர் மனிதவளத் துறை அமைச்சர் டான் சீ லெங் தலைமையில் 35,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர். வாழ்க்கை இப்போது இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இது உண்மையில் எங்கள் நாட்டிற்கும், மக்களுக்கும் ஒரு வகையான வெற்றி என்று அமைச்சர் கூறினார்.
ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் பக்தர்கள் மற்றும் தன்னார்வலர்களுடன் உரையாடிய அவர், காவடி தாங்குபவர்கள் ஊர்வலத்திற்கு தங்களைத் தயார்படுத்துவதைப் பார்வையிட்டார். மேலும் ஸ்ரீ தண்டாயுதபாணி கோயிலை சுற்றி பால்குடம் ஏந்திச் சென்றார். சுமார் 450 காவடி ஏந்தியவர்கள் சிங்கப்பூரில் உள்ள இரண்டு பெரிய முருகன் கோயில்களுக்கு இடையே 3.2 கிமீ தூரம் வெறுங்காலுடன் பயணம் செய்தனர்.
இரண்டு கோயில்களும் தமிழ்நாட்டில் இருந்து சிங்கப்பூருக்கு குடிபெயர்ந்த ஆரம்பகால பொதுமக்களால் கட்டப்பட்டவை. 51 வயதான திருநாவுக்கரசு சுந்தரம் பிள்ளை தனது சக்கர நாற்காலியில் 80 கொக்கிகள் அவரது உடற்பகுதி மற்றும் முகத்தில் துளையிட்டு கோயிலுக்கு வந்திருந்தார். முருகன் மீது கொண்ட பக்தியின் அடையாளமாக, 30 கிலோ எடையுள்ள அழகு காவடி எடுத்துச் சென்றார்.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபயணம் ஊர்வலத்தில் பங்கேற்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. எங்கள் குடும்பத்தின் நலனுக்காக நாங்கள் பிரார்த்தனை செய்தோம் என்று பிள்ளை கூறினார்.
விழாவில் 13,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்துச் சென்றனர். சனிக்கிழமை இரவு 11.30 மணிக்கு தொடங்கிய உற்சவம் ஞாயிற்றுக்கிழமை இரவு வரை நீடித்தது. இந்த ஊர்வலத்தை இந்து அறநிலைய வாரியம் (HEB) நேரடியாக ஒளிபரப்பியது.
HEB இன் தலைமை நிர்வாகி டி.ராஜ சேகர், கோயிலில் தங்களுக்கு உதவக் கூடிய 1,300 கோயில் ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்களுடன் ஒத்துழைத்த பக்தர்களுக்கு நன்றி தெரிவித்தார். இந்த திருவிழா காலனித்துவ காலத்தில் ரப்பர் தோட்டங்களில் பணிபுரிந்த தமிழ் மக்களால் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.