நமது தமிழ் சாகா சிங்கப்பூர் தளத்தின் “Exclusive” பக்கத்திற்கு இந்த வாரம் சிங்கப்பூரில் இருந்து பேட்டி அளித்திருப்பவர் திருமதி.தேவி. (பெயர் மாற்றப்பட்டுள்ளது).
இனி எல்லாம் அவரது வார்த்தைகளாக..
“தமிழ் சாகா சிங்கப்பூர் செய்தி நிறுவனத்துக்கு நன்றி. வெளியில் எனது பெயரோ, முகமோ தெரிய வேண்டாம் என்பதால் தான் எனது அடையாளத்தை வெளியிட வேண்டாம் என்று உங்களிடம் கேட்டுக் கொண்டேன். ஏனெனில், ஒரு பெண்ணாக இந்த உலகில் தனியாக சர்வைவ் பண்ணுவது என்பது எவ்வளவு கஷ்டம்னு இந்த செய்தியை படிக்குற எல்லோருக்கும் தெரியும்.
நான் சிங்கப்பூர்-ல 10 வருஷமா வேலை செஞ்சிகிட்டு இருக்கேன். இப்போ நல்ல போஸ்ட்-ல இருக்கேன். ஆனா, இதுக்காக நான் பட்டிருக்குற கஷ்டம் கொஞ்சம் நஞ்சமல்ல. தனியாக இங்கு தங்கியிருப்பதால், ஒவ்வொரு ஆம்பளையும் என்னிடம் பேசும் போது, தவறான கண்ணோட்டத்தில் தான் பேசுவாங்க. 3 மாசம் ரொம்ப நல்லா பேசுவாங்க. அதுனால நாம கொஞ்சம் நெருங்கி பேசுனா, உடனே அவங்க பேச்சுல வேற ஒன்னு தெரியும். வேற ஒன்னை அவங்க எதிர்பார்ப்பாங்க.
அத்தனைக்கும் காரணம், நான் என்னோட கணவரை பறிகொடுத்தது தான். சிங்கப்பூரில் தான் அவரும் வேலை பார்த்துகிட்டு இருந்தார். கடந்த 2009ம் ஆண்டு ஊருக்கு வந்திருந்த போது, ஒரு விபத்தில் சிக்கி இறந்துட்டார். 2 குழந்தைங்க எனக்கு. கடனும் வாங்கி இருந்ததால, நானே வேலைக்கு போறதுன்னு முடிவு பண்ணி தான் சிங்கப்பூர் வந்தேன்.
கணவர் இல்லாத பெண் என்பதாலேயே பலரும் என்கிட்டே நெருங்க பார்த்தாங்க. சிலர், வெளிப்படையாவே கேட்டாங்க. அப்போலாம் ரூமுக்கு போயிட்டு அழுவேன். அதுக்கப்புறம் பழகிடுச்சு. ஒரு பெண்ணா எந்த துணையும் இல்லாம நீங்க இருந்தால், சிலர் வீட்டுக் கதவை தட்ட தான் செய்வாங்க. அந்த சத்தத்தை கேட்டு பயந்து ஒடுங்கிடக் கூடாது. காத்துல கதவு அடிச்சுக்குதுனு நினைச்சுகிட்டு அடுத்த வேலையை பார்க்க கிளம்பிடனும்-னு புரிஞ்சிக்கிட்டேன்.
ஆரம்பத்துல நரகமா இருந்த சிங்கப்பூர், இன்னைக்கு என் புள்ளைங்க ஊர்ல நிம்மதியா வசதி வாழ்க்கையோட இருக்க காரணமாக இருந்துகிட்டு இருக்கு. என்ன ஒன்னு… என் பிள்ளைங்களை வருஷத்துக்கு ஒரு தடவை தான் பார்க்கிறேன். எனக்கு புள்ளையா பிறந்ததால, இந்த சின்ன வயசுல, பெற்ற தாய் பக்கத்துல இல்லாம, என் புள்ளைங்க வளருதுங்க. அது ஒன்னு தான் என்னை கொல்லுது. ஆனா, என் அண்ணன் எனக்கு தெய்வம் மாதிரி.
அவரு மட்டும் இல்லனா.. என் பிள்ளைங்க நான் இல்லாட்டியும் இவ்ளோ நல்லா வளர்ந்து இருக்க மாட்டாங்க. என்ன மாதிரி எத்தனையோ பெண்கள் இருக்கிறாங்க. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு வேதனை. எனக்கு இப்போ ஒரேயொரு ஆசை மட்டும் தான். எவ்ளோ சீக்கிரமா முடியும், அவ்ளோ சீக்கிரம் இன்னும் சம்பாதிச்சிட்டு, ஊரோட போய் செட்டில் ஆகி, என் புள்ளைங்களை என் மடியில் போட்டு தூங்க வைக்கணும். அது போதும். நான் சாகுற வரைக்கும் அவங்கள என் வைக்கணும்” என்று முடித்துக் கொண்டார்.
விரைவில், உங்கள் எண்ணம் நிறைவேற வாழ்த்துகள்!