சிங்கப்பூர் என்பது பல கலாச்சாரங்கள் ஒன்றிணைந்த ஒரு அழகிய தீவு, விஞ்ஞான ரீதியாகவும் அதே சமயம் இயற்கையையும் சரிசமமாக பேணி வளர்கின்ற அழகிய நாடு. சிங்கப்பூரார்கள் மட்டுமின்றி பிற நாடுகளை சேர்ந்த பல தொழிலாளர்களுக்கு ஒரு தாய்நாடாகவே விளங்குகிறது நமது சிங்கப்பூர் என்றால் அது மிகையல்ல. வருடம்தோறும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்து பணிசெய்து வருகின்றனர்.
தங்கள் சொந்த நாடுகளை விட்டு இங்கே வந்து பணி செய்து தங்களது வாழ்கை தரத்தை உயர்த்தும் பல சிறந்த தொழிலாளர்கள் சிங்கப்பூரில் வேலை செய்து வருகின்றனர். அதே சமயத்தில் கஷ்டப்பட்டு உழைக்கும் பணத்தை சூதாட்டம், மது போன்ற சில தேவையற்ற விஷயங்களுக்கு செலவிடும் சில வெளிநாட்டு தொழிலாளர்களும் சிங்கப்பூரில் இருக்கத்தான் செய்கின்றனர்.
சிங்கப்பூரில் பணியாற்றும் சில வெளிநாட்டு பணியாளர்கள், சில அற்ப சுகங்களுக்காக மாதம் முழுவதும் தாங்கள் கஷ்டப்பட்டு ஈட்டும் பணத்தை பல தவறான வழிகளில் விரயம் செய்கின்றனர். இந்நிலையில் சூதாட்டம் மற்றும் மது போன்ற பழக்கங்கள் மட்டும் இல்லாமல் சிங்கப்பூரில் பணிபுரியும் பிறநாட்டு பணிப்பெண்கள் சிலருடன் இணைந்தும் தங்கள் பணத்தை வீணடிக்கின்றனர்.
பிறநாடுகளில் இருந்து வேலைக்கு வரும் பணிப்பெண்களுடன் நட்பு ரீதியாக பழகத்தொடங்கி பிறகு தங்கள் மொத்த வருமானத்தையும் அவர்களுக்காக செலவிடும் அவல நிலைக்கு ஆளாகின்றனர். பிழைப்பிற்காகவும் வாழக்கை தரத்தை மேன்படுத்துவதற்காகவும் பிற நாடுகளுக்கு உழைக்க செல்பவர்கள் இதுபோன்ற அற்ப சுகங்களுக்காக தங்கள் வாழக்கையையே தொலைத்துவிடுகின்றனர் என்பது உண்மை.
ஆகையால் உழைக்கும் நேரத்தில் பிற சிந்தனைகள் இல்லாமல் வறுமையில் வாடும் தங்களது குடும்பங்களை கண்ணோக்கினால் இதுபோன்ற தேவையற்ற பழக்கத்தை தவிர்க்கலாம்.