கோலாலம்பூர்: சீனாவின் ஷென்சென் (Shenzhen) நகருக்குப் புறப்பட்ட ஏர்ஏசியா விமானம் ஒன்று கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியது. விமானத்தின் வலது இயந்திரத்தில் தீ ஏற்பட்டதாக சிலாங்கூர் தீயணைப்பு மீட்புத் துறை தெரிவித்திருந்த நிலையில், ஏர்ஏசியா நிறுவனம் அதனை மறுத்துள்ளது.
விமானத்தின் ஓர் இயந்திரத்தின் குழாய் சேதமடைந்து அதிலிருந்து வெப்பக் காற்று வெளியேறியதால் பழுதுபார்ப்புப் பணிகளுக்காக விமானத்தைத் தரையிறக்க வேண்டியதாயிற்று என ஏர்ஏசியா தெளிவுபடுத்தியுள்ளது. இயந்திரத்தில் தீ எதுவும் ஏற்படவில்லை என்றும் அந்நிறுவனம் திட்டவட்டமாக கூறியுள்ளது.
நேற்று (மார்ச் 26) இரவு கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து ஷென்சென் நகருக்கு AK128 என்ற விமானம் புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மீண்டும் கோலாலம்பூருக்குத் திரும்பியது.
விமானம் தரையிறக்கப்பட்டபோது அதில் 171 பயணிகள் இருந்தனர். அவர்களுக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு, இன்று (மார்ச் 27) அதிகாலை மணி 3.46க்கு கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து அவர்கள் ஷென்சென்னுக்குப் புறப்பட்டனர். காலை மணி 7.51க்கு அவர்கள் சீனா சென்றடைந்ததாக ஏர்ஏசியா தெரிவித்துள்ளது.
பழுதுபார்க்கப்பட்ட விமானம் மீண்டும் அடுத்த திங்கட்கிழமை (மார்ச் 31) முதல் தனது சேவையைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக: விமானத்தின் வலது இயந்திரத்தில் தீ ஏற்பட்டதாக இரவு மணி 10.37க்கு தங்களுக்கு அவசர அழைப்புக் கிடைத்ததாக சிலாங்கூர் தீயணைப்பு மீட்புத் துறை தெரிவித்திருந்தது. உடனடியாக ஓடுபாதைக்கு 9 வீரர்களும் தீயணைக்கும் வாகனமும் அனுப்பப்பட்டதாகவும் அத்துறை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.