TamilSaaga
singapore court

இறுதி நிமிடத்தில் மரண தண்டனையை நிறுத்திய சிங்கப்பூர் கோர்ட் – பரந்தாமம் வழக்கில் திருப்பம்!

சிங்கப்பூருக்குள் போதைப்பொருள் கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட மலேசியர் ஒருவரின் மரணதண்டனை, நேற்று பிப்ரவரி 20ம் தேதி, அவர் தூக்கிலிடப்படுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பாக நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த 2014ம் ஆண்டு கைது செய்யப்பட்டு, மே 2017ல் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர் தான் மலேசியாவை சேர்ந்த பன்னீர் செல்வன் பரந்தாமம்.

கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் தொடர்ந்து இந்த வழக்கு நடைபெற்று வந்த நிலையில், பிப்ரவரி 19ம் தேதி அவருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்பாக, அந்த மரண தண்டனைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மலேசியரான பரந்தாமம், ஹெராயின் என்றும் அழைக்கப்படும் 51.84 கிராம் அளவு கொண்ட டயமார்ஃபினை சிங்கப்பூருக்கு கள்ளத்தனமாக இறக்குமதி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டார். நமது சிங்கப்பூர் அரசை பொறுத்தவரை 15 கிராமுக்கு மேல் ஹெராயின் கடத்துவது மரண தண்டனைக்குரிய குற்றமாகும். பரந்தாமம், அந்த போதைப்பொருளை கடத்த உதவியதற்காக அவருக்கு கட்டாய மரண தண்டனை விதிக்கப்பட்டது.

பின்னர் பரந்தாமம் தனது தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்தார். ஆனால் அவரது விண்ணப்பமும், அதைத் தொடர்ந்து அவர் போட்ட மேல்முறையீடும் இரு முறை உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டன.

இந்நிலையில் நேற்று பிப்ரவரி 20 அவருக்கு மரணதண்டனை விதிக்கப்படவிருந்த நிலையில், அது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஜனவரி 27, 2025 மற்றும் பிப்ரவரி 16, 2025 ஆகிய தேதிகளில் அவருடைய மரணதண்டனை விதிக்கப்பட்டு பின் அது ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

Related posts