பள்ளி படிப்பை முடித்துவிட்டோம் இனி கல்லூரி வாழக்கையை அணு அணுவாக ரசித்து வாழவேண்டும், என்ற அந்த கனவு அனைத்து மாணவர்களிடமும் உள்ள ஒரு சர்வசாதாரணமான எண்ணம் தான். ஆனால் அந்த சிறிய ஆசை கூட சில சமயங்களில் பலருக்கு கிடைப்பதில்லை என்பது தான் வேதனை.
வினோத், நாம் வாழ்க்கையில் தினமும் கடந்து செல்கின்ற எத்தனையோ மாணவர்களில் அவரும் ஒருவர். மேற்குறிய அதே ஆசையில் தான் அவரும் பள்ளிப்படிப்பை முடித்து கல்லுரிக்கு சென்றிருப்பார், ஆனால் ஒரு 19 வயது வாலிபராக அவர் இன்று சுமக்கும் பாரங்கள் பல.
வாழ்க்கையை அனுபவிக்கவேண்டிய வயது, ஆனால் வறுமை ஆட்கொண்ட குடும்பம், நோய்வாய்ப்பட்ட தங்கை, தனியொரு ஆளாக குடும்பத்தை காப்பாற்றவேண்டிய கட்டாயம். இப்படி பல பாரங்கள் தோளில் இருக்க என்ன நடந்தாலும் நான் படித்தே தீரவேண்டும் என்ற வைராக்கியத்துடன் வாழ்ந்து வருகின்றார் வினோத்.
B.Com பயின்று வரும் வினோத், கல்லூரி முடித்த உடனே கிடைக்கும் கொஞ்ச நேரத்தில் படித்துவிட்டு இரவு முழுவதும் காய்கறி மார்க்கெட்டில் கணக்கு எழுதி மூட்டைகளை அடுக்கும் வேலையை செய்து வருகின்றார். ஏனென்றால் அதன் மூலம் வரும் வருவாய் தான் அவரு படிப்புக்கும், குடும்பத்திற்கும், தங்கையின் மருத்துவ செலவுக்கும் செலவிடப்படுகிறது.
குடும்பத்தை கவனிக்கும் அதே நேரத்தில், கல்லூரி லீவு நாட்களில் கூட ஆசிரியர்களை தொடர்புகொண்டு கூடுதலாக பாடங்களை கற்று நல்ல முறையில் தேர்ச்சி பெற்று வருகின்றார் வினோத். கல்லூரிக்கு வருவதே ஆனந்தமாக இருக்கத்தான் என்று நினைக்கும் சில இளசுகள் மதில் படித்தால் மட்டுமே தனது எதிர்காலம் சிறக்கும் என்று எண்ணி ஓய்வின்றி உழைத்து வருகின்றார் அவர்.
இதற்கிடையில் இரவு நேரத்தில் மட்டுமே வேலைக்கு சென்று வருவதால் “என்னடா ஏவலயாச்சும் வச்சுருக்கியா, நைட் நேரத்துல வீட்ல இருக்கிறதே இல்ல” என்று அக்கம்பக்கத்தினரின் ஏளன பேச்சுக்கு ஆளாகி வருகின்றார் வினோத்.
ஆனால் பகல் முழுதும் படிப்பு இரவு முழுதும் வேலை என்பது உடல் ரீதியாக பல பிரச்சனைகளை கொண்டு வரும். ஆனால் குடும்ப நிலை, தங்கையின் மருத்துவ செலவு என்று பல பாரங்கள் தோளில் இருக்க தனது உடல் நலனை கருதாமல் ஓடிக்கொண்டிருக்கிறார் வினோத். நிச்சயம் பல நல்ல உள்ளங்கள் அவருக்கு உதவ முன்வருவார்கள் என்று நம்புவோம்.