கோலிவுட்டின் பிரபல நடிகை யாஷிகா ஆனந்த், சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நேற்று இரவு நடந்த பயங்கர கார் விபத்தில் படுகாயம் அடைந்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவரது நெருங்கிய தோழியான வள்ளிவள்ளிச்செட்டி பவனி இந்த கார் விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த யாஷிகா ஆனந்த் மற்றும் அவரது இரண்டு நண்பர்களுக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புது தில்லியில் 1999ம் ஆண்டு பிறந்த யாஷிகா ஆனந்த் கடந்த 2014ம் ஆண்டு வெளிவந்த ‘கவலை வேண்டாம்’ என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் இவர் பெரிய அளவில் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே கடந்த 2019ம் ஆண்டு ஒரு கார் விபத்து சம்பவத்தில் யாஷிகா ஈடுபட்டதாக தகவல் வெளியாகி அதன்பிறகு அதனை யாஷிகா ஆனந்த் மறுத்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நேற்று இரவு நடந்த கார் விபத்தில் படுகாயமடைந்த யாஷிகா தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.