TamilSaaga

கல் நெஞ்சையும் கரைக்கும் “உண்மை” – கொடுத்து வச்சவ செத்துப் போயிட்டா!

எல்லாக் கொடுமைகளையும் அனுபவித்து முடித்த பிறகும் எதுவுமே நடக்காதது போல வாழ வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவது தான் கொடுமைகளில் எல்லாம் பெருங் கொடுமை…. அப்படி ஒரு கொடுமைக்கு சபிக்கப் பட்டவர்களைப் பற்றித்தான் பதிவு செய்ய விரும்புகிறேன் இந்தப் பக்கத்தில்…..

நாம் சாதாரணமாக உழைத்து, உண்டு , உறங்கி எழும் ஒவ்வொரு நாளும், நம் போன்ற சாதாரண குடும்பங்கள் பலவற்றில் பாலியல் வன்புணர்ச்சியால் கொடூரமாக இறந்து போனவர்களுக்கான ஓராயிரம் ஒப்பாரிகளை சத்தமே இல்லாமல் பதிவு செய்து கொண்டு கடந்து போகிறது காலம். கொடுமையான , மனித மனங்களை உலுக்கிப் பார்க்கக் கூடிய, பாலியல் வன்புணர்ச்சி மரணங்களைப் பற்றி நாம் வாசிக்கும் போதும், சமூக ஊடகங்கள் வழியாக அறிய வரும் போதும், நம்மை அறியாமலேயே ஒரு அனிச்சை செயல் போல அந்தக் கொடுமையை செய்த மனித மிருகங்கள் மீது ஆத்திரமும், இறந்துபோன (அ) பாதிக்கப்பட்ட, குழந்தைகள், பெண்கள் மீது ஒரு பரிதாபமும் தோன்றத்தான் செய்கிறது.

அதற்கு மாறாக இறந்து போன அந்தக் குழந்தை (அ) பெண்ணைக் குறித்து, “நல்லவேளை, செத்துப் போயிட்டா, குடுத்து வச்சவ” என்று யாராவது சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும்? அப்படியும் சொல்லக்கூடிய மனிதர்கள் இருக்கிறார்களா ? ஆம் இருக்கிறார்கள் !!! அவர்கள் பல்வேறு சூழல்களில், பல்வேறு விதமான கொடூர மனித மிருகங்களால், சொல்ல முடியாத பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகி, ஊர் அறிந்து, உலகம் அறிந்து, ஊடகங்களுக்கு தீனி போட்டு முடித்த பிறகு, இது எதுவுமே நடக்காதது போல தினமும் வாழ்வைத் தொடர வேண்டிய சூழலுக்கு தள்ளப்படும் பெண்கள் தான்…. அதேபோன்ற வன்முறையால் இறந்து போனவர்களை குறித்து நினைக்கும் போது கண்டிப்பாக மேலே சொன்னது போல தான் நினைப்பார்கள்,” குடுத்து வச்சவ அவ, செத்துப் போயிட்டா, என்னால முடியலயே” நரகமாகிப் போன அந்தப் பெண்களின் வாழ்க்கையைப் பற்றி என்றைக்காவது நினைத்துப் பார்த்ததுண்டா சகோதரங்களே?!

உடல் பாதிப்பு, மனவேதனை, ஊராரின் மறைமுக ,நேரடி விமர்சனங்கள், குற்ற உணர்வு, காமுகர்களின் குறுகுறு பார்வை, மனிதாபிமானிகள் பரிதாபம், இத்தனையையும் பொறுத்துக் கொண்டு, வாழவும் வழியின்றி, சாகவும் துணிவின்றி, நடைபிணமாய் வாழும் அந்தப் பெண்களின் வலியை உணரும் போதெல்லாம் நானும் கூடத்தான் சிலவேளைகளில் நினைக்கிறேன்! இறந்து போனவர்கள் நிலையே பரவாயில்லையோ!?!?!

பாலியல் வன்புணர்ச்சி ! மனிதகுலம் எக்காலத்திலும் ஏற்றுக் கொள்ளவே முடியாத, கூடாத, மாபெரும், மன்னிக்க முடியாத குற்றம்! பாவம்! ஆனால் எதார்த்த நிலை என்ன? திரும்பும் திசையெல்லாம் பெருகி வருவது என்னவோ பாலியல் வன்முறைகளும் குற்றங்களும் தான்! இதை நிரூபிக்கிறது பின்வரும் இந்த மிகச் சில புள்ளிவிபரங்கள் !

உலகத்தில் மூன்றில் ஒரு பெண் உடல் ரீதியாகவோ, பாலியல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ வன்முறைக்கு உள்ளாக்கப்படுகிறாள்.

ஒன்பதில் ஒரு பெண் குழந்தையும், 53 ல் ஒரு ஆண் குழந்தையும் தவறான முறைகளில் பாதிக்கப்படுகிறார்கள்.

இந்தியாவோ இது எல்லாவற்றிலும் பலபடிகள் முன்னே நிற்கிறது! கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் தொடர்ந்து 2,4,8 மடங்கு வேகத்தில் பெருகி இருக்கிறது.

ஒவ்வொரு 155 நிமிடத்திற்கும் இந்தியாவில் 16 வயதுக்கு உட்பட்ட ஒரு பெண் குழந்தை பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்படுகிறாள்.

இந்த கோவிட் பெரும் தோற்றுக் காலத்தில் வருத்தத்திற்குரிய விதத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களும் பல மடங்கு அதிகரித்து இருக்கின்றன. கோவிட் தோற்றுக்காவது தடுப்பூசி இருக்கிறது . ஆனால் இந்த பாலியல் வன்முறைகள் அதை விட மோசமானதாகவே பெருகி வருகிறது” என கடந்த மார்ச் மாதம் தனது வருத்தத்தை பதிவு செய்கிறார் உலக சுகாதார அமைப்பின் (WHO) நிர்வாக இயக்குனர். இன்னும் தெளிவாக இந்த கோவிட் காலத்தில் அதிகரித்து வரும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை, ‘நிழல் தொற்றுநோய்’ [ SHADOW PANDEMIC ] என்றே குறிப்பிடுகிறார் ஐக்கிய நாடுகள் மகளிர் அமைப்பின் நிர்வாக இயக்குனர்.

இவை அனைத்தையும் தாண்டி எனது வேதனையோ , “அந்தப்” பெண்களின் , “அந்த” வன்முறைக்கு பிந்தைய அன்றாட வாழ்வு தான்.!

ஒன்பதாம் வகுப்பு மாணவி அவள். அடுத்த வீட்டில் இருக்கும் இளைஞனால் பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்படுகிறாள். அதனை அறிய வந்த அந்த மாணவியின் அம்மா நீதி கேட்டு அந்த இளைஞனின் வீட்டு வாசலில் போய் நிற்கிறாள். அந்தக் குற்றவாளியின் அப்பாவும் 18 வயது வந்தவுடன் உன் மகளை என் மகனுக்கு திருமணம் செய்து வைத்து விடுகிறேன் என சமாதானம் கூறி அனுப்பி வைக்கிறான். அந்த விதவைத் தாயும் நம்பியவளாய் வீடு வருகிறாள். மகளைப் படிக்க வைக்கிறாள். அவள் படித்து முடிக்கும் முன்னரே, வேறு ஒரு பெண்ணை அவள் ஊரிலேயே சென்று திருமணம் முடித்து வந்து விடுகிறான் அந்த அடுத்த வீட்டு அரக்கன். அம்மாவும் மகளுமாக நீதிமன்றத்தின் வாசல் படி ஏறுகிறார்கள்! அவன் அரசுப் பணியில் இருக்கிறான் எனும் ஒரே ஒரு காரணத்திற்காக, உயர் நீதிமன்றம் அவனுக்கு ஜாமீன் வழங்குகிறது. உச்ச நீதிமன்றமோ இன்னும் கொடுமையாக அந்தப் பையன் அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்ள வழி இருக்கிறதா எனக் கேள்வி கேட்கிறது?

சட்டம், குற்றம், தண்டனை எல்லாவற்றையும் மறந்து விடுங்கள் நண்பர்களே…. இதற்குப் பிறகு அந்த இளம் பெண்ணின் வாழ்வு எப்படி இருக்கும் என்பதை மட்டும் எண்ணிப் பாருங்களேன்?! இதையெல்லாம் துணிச்சலாக எதிர்கொண்டு வரவேண்டும், என ஆயிரமாயிரம் கருத்துக்கள் சொல்லலாம்! உதவிகளைச் செய்யலாம்! ஆனால் எதார்த்தத்தை எண்ணிப் பாருங்கள் நண்பர்களே!

அந்தப் பெண்ணால் இனி கவனமாக படித்து பட்டம் பெற முடியுமா ? பெற்றுவிட்டாலும் – ஊரறிய வழக்கு மன்றம் எல்லாம் போய் வந்த பிறகு நாம் குறிப்பிடும், நாம் வகுத்து வைத்திருக்கும் ‘சாதாரண வாழ்க்கை’ வாழ முடியுமா?

வாழ்ந்தாலும் அவளது எதிர்காலம் , திருமண வாழ்வு என்னவாகும்?! திருமணம் நடந்து விட்டாலும் –
குத்தி காட்டப்படாமல், விமர்சன வீச்சுக்களை சந்திக்காமல், அவள் எல்லாரையும் போல் கடந்து போக முடியுமா?!

இதெல்லாம் பிற்போக்குத்தனமான பார்வை, கேள்விகள் என்றுதான் நானும் நினைத்துக் கொண்டிருந்தேன்! மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரை ?!?!

தமிழகம் கஜா புயலால் பாதிக்கப்பட்டபோது களப்பணி செய்ய பட்டுக்கோட்டை அருகில் உள்ள கிராமம் ஒன்றுக்கு சென்றிருந்தேன். அங்கே மாலையில் சில பெண்களோடு சேர்ந்து, பெண்களுக்குத் தேவையான பொருட்கள் சிலவற்றை வீடு வீடாக கொடுத்துக் கொண்டிருந்தபோது, ஒரு வீட்டிற்குச் சென்று, அந்த வீட்டில் இருந்த பெண்ணை பற்றி உடன் வந்த அந்த இளம் பெண்கள் சொன்னதை அப்படியே பதிவு!

அக்கா ! அந்த பொம்பளைக்கு ரெண்டு புருஷன் தெரியுமா?”,

“என்னம்மா சொல்றீங்க!?”,

“ஆமாங்க அக்கா ! அவங்க காலேஜ் படிக்கும் போது அவங்க தாய் மாமா அந்த பொம்பளைய கெடுத்துட்டாங்களாம், ஊருக்கே தெரிஞ்ச அது பெரிய பிரச்சனை ஆயிடுச்சாம், அவங்க மாமா அதுக்கப்புறம் திருச்சிக்குப் போய் அங்கேயே வேற ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டு செட்டில் ஆகிட்டாராம். இந்த அக்கா அதுக்கப்புறம் வேற ஒருத்தர கல்யாணம் பண்ணிக்கிட்டாங்களாம்.” என்று சொல்லிவிட்டு ‘கொல்’ என்று ஒரு சிரிப்பும் சிரித்தார்கள்! இத்தனைக்கும் அவர்கள் யாரைப்பற்றி பேசினார்களோ அந்த பெண்ணுக்கு 40 வயதுக்கு அருகிலிருக்கும். 10 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் குழந்தையும் இருக்கிறான். என்னிடம் இந்த கதை சொன்னவர்கள் எல்லாம் இளம்பெண்கள் ,அவர்களுக்கு அது செவி வழிச் செய்தி!!! இதுதான் எதார்த்தம் நண்பர்களே!!!

என்ன செய்துவிட முடியும்? அப்படிப்பட்ட பெண்களைச் சந்திக்கும் போது, எந்தவித முன் சார்பு எண்ணமும் இல்லாமல், நட்புக்கரம் நீட்டுவதைத்தவிர எதுவும் செய்ய முடியவில்லை என்னாலும் இன்றுவரை..!!! (எதிர்காலம் வாசல் திறக்கும் ! வழிபிறக்கும் !என்று நம்புகிறேன் )

இனிமேல் இதுபோன்ற பாலியல் வன்புணர்ச்சி கொடுமைகளால் பாதிக்கப்பட்ட பெண்களைப் பற்றி அறிய வரும்போது, சட்டங்கள் கடுமையாக இல்லையே எனும் ஆதங்கம் –
இப்படிச் செய்தவனை உயிரோடு விடக்கூடாது எனும் ஆத்திரம் –
இது உண்மையா ? பொய்யா ? இதுக்கு பின்னாடி வேற ஏதோ இருக்கு ? என்னும் சந்தேகம் –
இவை அனைத்தோடும் சேர்த்து-
‘ஐயகோ ! இதற்குப் பிறகு இந்த பெண் வாழ்க்கை ‘சாதாரணமாக ‘ இருக்காதே எனும் அக்கறையையும் , அன்புணர்வையும் கொஞ்சம் சேர்த்துக் கொள்ளுங்கள்! என்பதைத்தான் இந்த பக்கத்தில் பதிவு செய்ய விரும்புகிறேன் !!!

பெண் என்பதால் பெண்களுக்காக மட்டும்தான் எழுதுவீர்களோ ?!
இல்லையே ஆண்கள் மீதான ஒரு மாறுபட்ட பார்வையோடு அடுத்த ஆரா அருணாவின் பக்கத்தில் சந்திப்போம்!!!

Related posts