பெருந்தொற்றினைப் பற்றி சிங்கப்பூரர்கள் தங்களது மன நிலையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் பயத்தினால் முடங்கிப் போகக் கூடாது என்றும் பிரதமர் லீ சிங்கப்பூர் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். பெருந்தோற்று நேரத்தில் உருவாக்கப்பட்ட சுகாதார வழிகாட்டு நெறிமுறைகளை எளிமைப்படுத்துவது, அதன் வழியாக உலகத்தோடு மீண்டும் தொடர்பு ஏற்படுத்திக் கொள்வது போன்ற முயற்சிகளில் முன்னெடுப்பை தொடங்கி இருக்கின்ற இந்த நேரத்தில், மக்கள் எவ்வாறு பயத்திலிருந்து மீண்டு அதை எதிர்கொள்வது, அதனோடு வாழ கற்றுக் கொள்வது என்பது குறித்து கடந்த அக்டோபர் 9 சனிக்கிழமை பிரதமர் திரு. லீ அவர்கள் தொலைக்காட்சி வழியாக சிங்கப்பூர் மக்களுக்கு உரையாற்றினார்.
அந்த உரையின் முக்கிய கூறுகள் பின்வருமாறு…
இளைஞர்கள் மற்றும் முழுதாக தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களில் 98%பேர் ஒருவேளை தொற்றினால் பாதிக்கப்பட்டாலும், சாதாரண காய்ச்சல் போல நாம் நமது வீடுகளிலேயே, நம்மை நாமே குணப்படுத்திக் கொள்ள முடியும். எனவே வீடுகளில் குணமாக்குவதை நாடு முழுமையாக வரவேற்கிறது.
மருத்துவமனைகளில் மன அழுத்தமின்றி, எளிதாக வீட்டிலேயே உங்களை குணப்படுத்திக் கொள்ள முடியும். இதனால் உங்களுக்கு பழகிய சூழலிலேயே குணமாக வாய்ப்பு கிடைப்பதோடு, உண்மையிலேயே பெரும் அபாயத்தில் இருக்கிற ஒருவருக்கு மருத்துவ வசதி எளிதாக கிடைப்பதற்கும் உங்களால் உதவி செய்ய முடியும். இன்னும் பலருக்கு வீட்டிலேயே தனிமைப்படுத்துதல் மேற்கொள்ளும்போது, குடும்ப உறுப்பினர்களுக்கு தோற்று பரவக்கூடியது குறித்த பயம் இருக்கத்தான் செய்கிறது. அதை அரசு நன்றாகவே புரிந்து கொண்டுள்ளது. எனவே வீட்டிலேயே தனிமைப்படுத்தலில் இருப்பவர்களுக்கு தேவையான எல்லா வசதிகளும் செய்து தரப்படும்.
தொடக்கத்தில் நமது சேவைகளை வழங்குவதில் பல குறைபாடுகள் இருந்தபோதும் அவை அனைத்தும் இப்போது சரி செய்யப்பட்டுள்ளன. கோவிட் பெரும் தொற்று இப்போது ஏறக்குறைய சரிசெய்யக்கூடிய ஒன்றாக மாறி வருவதால், மெதுவாக கடுமையாக்கப் பட்டிருந்த சுகாதார நெறிமுறைகளும் எளிதாக்கப்படும்.
அதேபோல மக்களும் நோயினால் பாதிக்கப்பட்டாலும், பாதிக்கப்பட்டவர்களோடு தொடர்பு ஏற்பட்டாலும், என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தெளிவாக இருக்கவேண்டும். ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட சமூக அக்கறை தேவைப்படுகிறது. தங்களைத் தாங்களே பரிசோதித்துக் கொள்வதும், தங்களை தாங்களே தனிமைப் படுத்திக் கொள்வதும், அறிகுறிகள் ஏற்படும்போது மருத்துவரின் ஆலோசனை பெறுவதும் ஒவ்வொருவரின் தனித்தனி அக்கறையின் அடிப்படையில் நடைபெற வேண்டும். ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பை சரியாக செய்யும்பொழுது covid-19 பெரும் அச்சத்தை உண்டாக்கக்கூடிய ஒரு நோயாக தொடர்ந்து இருக்காது.
இப்பொழுதோ அல்லது பின்னரோ எல்லாரும் இந்த தொற்று நோயினை கடந்து போகத்தான் வேண்டும். ஆனால் வயதானவர்களுக்கு பாதிப்பின் விளைவு அதிகமிருக்கிறது. வெள்ளிக்கிழமை நண்பகல் வரை 142 பேர் இந்த பெரும் தொற்றினால் சிங்கப்பூரில் இறந்திருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் தடுப்பூசி போடாதவர்கள் மற்றும் வேறு உடல் குறைபாடுகள் இருந்த வயதானவர்கள். மூன்றில் ஒரு பங்கினர் தடுப்பூசி போட்டுக் கொண்ட முதியவர்கள்.
அடுத்த சில வாரங்கள் அல்லது மாதங்களில் பெருந்தொற்று மரணங்கள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன. குறிப்பாக வயதானவர்கள் பாதிக்கப்படும் அபாயம் அதிகம் இருப்பதால் அவர்கள் தடுப்பூசி போட்டு இருந்தாலும் தங்களது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்கிக் கொள்ள பூஸ்டர்களையும் போட்டுக்கொள்ள வேண்டும். சமூக விலகளையும் கடைபிடிக்க வேண்டும். எளிதான உடற்பயிற்சிக்கு செல்வதோ, புத்துணர்வு பெறுவதற்காக ஒரு சிறிய தொலைவு நடந்து செல்வதோ பெரிய அளவில் பாதிப்பை உண்டாக்க போவதில்லை. ஆனால் மதுபானங்கள் மற்றும் கேளிக்கை விருந்துகளுக்காக நண்பர்களோடு சந்திப்பது தொற்று பரவும் அபாயத்தை அதிகரிக்கும் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
வயதானவர்களைப் போலவே தடுப்பூசி போட்டுக்கொள்ள முடியாத 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மீதும் அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. குழந்தைகளுக்கான தடுப்பூசி குறித்த அமெரிக்க ஆராய்ச்சிகளை தொடர்ந்து சிங்கப்பூர் உன்னிப்பாக கவனித்து வருகிறது. அவை பாதுகாப்பானவை என்று சோதனைகளின் அடிப்படையில் தெரிவிக்கப்படும் பொழுது, கண்டிப்பாக நாமும் பயன்படுத்தலாம்.
இந்தக் கோவிட் பெருந்தொற்றினை குறித்து பயப்படாமல், கொஞ்சம் கொஞ்சமாக, துண்டிக்கப்பட்டு இருந்த உலகத்துடனான தொடர்புகளை மீண்டும் ஏற்படுத்திக் கொள்வதும் தேவையாகிறது. எனவேதான் சிங்கப்பூர் தனது தடுப்பூசி பயணத்திட்டத்தை ஜெர்மனி, புருனை போன்ற நாடுகளுக்கு அறிவித்தது. அதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை முதல் தென்கொரியாவும் அந்த பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, இந்த பெரும் தொற்று அச்சத்தினால் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்க வேண்டிய ஒரு நோய் அல்ல, மாறாக குணப்படுத்தக்கூடிய அதேசமயம் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ஒரு நோய் என்பதை கருத்தில் கொண்டு, கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப நாட்டு மக்களுக்கு பிரதமர் லீ அழைப்பு விடுத்துள்ளார்.