TamilSaaga

லிட்டில் இந்தியாவில் வெளிநாட்டு ஊழியர்கள் ஓய்வு: குடியிருப்பாளர்கள் புகார், அமைச்சர் நடவடிக்கை!

சிங்கப்பூர், ஏப்ரல் 28 – லிட்டில் இந்தியாவில் ஞாயிற்றுக்கிழமைகளிலும் பொது விடுமுறை நாள்களிலும் சில வெளிநாட்டு ஊழியர்கள் வீவக வீடுகளின் அடித்தளங்களில் இளைப்பாறுவது குறித்து குடியிருப்பாளர்கள் புகார் தெரிவித்துள்ளதாக கலாசார, சமூக, இளையர் துறை மற்றும் வர்த்தக, தொழில்துறை அமைச்சு துணை அமைச்சர் திரு ஆல்வின் டான் தெரிவித்தார்.

மோல்மின்-கேர்ன்ஹில் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு டான், இதற்குத் தீர்வு காணத் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். நாட்டு நிர்மாணத்திற்கு அயராது உழைக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் தங்களது ஓய்வு நேரங்களில் இளைப்பாறுவதற்கு அவர்களுக்கு உரிமையுள்ளது என்றும் அவர் கூறினார்.

“ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் எங்களது பணிக்குழு தொண்டூழியர்கள் லிட்டில் இந்தியாவிற்குச் சென்று அங்குள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கு அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட இளைப்பாறும் இடங்களில் ஓய்வெடுக்கும்படி அறிவுறுத்தி வருகின்றனர். நானும் அவர்களுடன் இணைந்து இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்,” என்று திரு டான் தெரிவித்தார்.

பெரிதாகப் பயன்படுத்தப்படாத பல்நோக்கு மண்டபங்களும் ரேஸ் கோர்ஸ் சாலையில் அமைந்துள்ள பேருந்து நிலையமும் வெளிநாட்டு ஊழியர்களின் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். மேலும், பாதுகாப்பை மேம்படுத்தவும் அதிகப்படியான சத்தம் போன்ற பிரச்சினைகளை விரைவாகக் கையாளவும் கூடுதல் துணைக் காவல் படையினரும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் விளக்கினார்.

சமீபத்தில் இதுகுறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்த திரு டான், தமக்கு நன்கு அறிமுகமான ஒரு குடியிருப்பாளர் இந்த விவகாரம் குறித்துத் தம்மிடம் பேசியதாகவும், தாம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தவறான குற்றச்சாட்டை அவர் மீது சுமத்தியதாகவும் குறிப்பிட்டார்.

குடியிருப்பாளர்கள் வெளிநாட்டு ஊழியர்கள் மீது அக்கறை கொண்டுள்ளதையும், அவர்களின் கவலைகளுக்குத் தமது பணிக்குழு செவிசாய்த்து வருவதையும், நடவடிக்கைகள் சீராக மேற்கொள்ளப்பட்டு வருவதையும் திரு டான் தனது பதிவில் தெளிவுபடுத்தியிருந்தார்.

அனைவரும் ஒருவரையொருவர் மரியாதையுடன் நடத்திக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்திய திரு டான், தம்மைப் பற்றித் தவறாகப் பேசிய அந்த குடியிருப்பாளர் தனது தவறை உணர்ந்து, தம்முடனும் தமது குழுவினருடனும் ஆக்கப்பூர்வமான கலந்துரையாடலில் ஈடுபடத் தாம் வரவேற்பதாகவும் அழைப்பு விடுத்தார்.

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

Related posts