மத்திய போதைப்பொருள் தடுப்பு இயக்கத்தின் அதிகாரிகள் கடந்த ஜூலை 12 முதல் 16 வரை தீவு முழுவதும் போதை பொருட்கள் தொடர்பாக அதிரடி சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர். இந்த தேடுதல் வேட்டையில் சந்தேகத்திற்கிடமான 104 பேர் கைது செய்யப்பட்டனர். ஆங் மோ கியோ, கெய்லாங், புங்க்கோல், சிமேய் மற்றும் யிஷுன் போன்ற இடங்களில் நடந்த சோதனைகளில் சுமார் 1,98,000 டாலருக்கும் அதிகமான போதைப்பொருட்கள் சிக்கின.
மேலும் இந்த தேடுதல் வேட்டையில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவமும் அரங்கேறியுள்ளது. அதிகாரி ஒருவர் போதைப்பொருட்கள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் வீட்டில் சோதனை நடத்தியபோது அந்த வீட்டில் ஐந்து, இரண்டு மற்றும் 10 மாத வயதுடைய மூன்று இளம் குழந்தைகள் இருந்துள்ளனர். சோதனை நடத்திய அந்த நேரத்தில் அந்த 10 மாத குழந்தை பசியால் அழுதுள்ளது.
இதனை கண்ட அந்த அதிகாரி அழுத அந்த குழந்தையை ஒரு கையில் தூக்கிக்கொண்டு, அடுத்த கையில் அந்த குழந்தைக்காக பாலை காய்ச்சிய புகைப்படம் வெளியாகி பலரின் பாராட்டுகளை பெற்றுவருகிறது. “இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான தனக்கு அழுகின்ற பச்சிளம் குழந்தையின் பசி புரியும்” என்று அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அந்த வீட்டில் இருந்தவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், அந்த ஆதரவற்ற மூன்று குழந்தைகளும் பாத்திரமான இடங்களில் சேர்க்கப்பட்டனர்.