TamilSaaga

சிங்கப்பூரில் பார்ட்லியில் பள்ளியில் அதிர்ச்சி: ஆசிரியர் மீது பேனாக்கத்தி தாக்குதல்!

சிங்கப்பூர்: பார்ட்லி உயர்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை (ஏப்ரல் 28) ஆசிரியர் ஒருவர் மாணவரால் பேனாக்கத்தியால் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக மாணவன் ஒருவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த ஆசிரியர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும், அங்கு அவருக்கு வெளிநோயாளர் சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு திரும்பியதாகவும் பள்ளி நிர்வாகம்

தெரிவித்துள்ளது. தற்போது அவர் மருத்துவ விடுப்பில் ஓய்வெடுத்து வருவதாகவும், உடல்நலம் தேறி வருவதாகவும் பள்ளியின் தலைமை முதல்வர் திருமதி பிரிட்டா சீட் அவர்கள் கூறினார்.

மேலும், இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்றும், கைது செய்யப்பட்ட மாணவன் தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அந்த மாணவன் பள்ளிக்குத் திரும்பவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

சம்பந்தப்பட்ட மாணவன் மற்றும் அவனது பெற்றோருடன் பள்ளி நிர்வாகம் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், மாணவருக்கும் பாதிக்கப்பட்ட ஆசிரியருக்கும் தேவையான அனைத்து ஆதரவையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் திருமதி சீட் உறுதியளித்தார்.

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை இதுகுறித்து கூறுகையில், திங்கள்கிழமை மதியம் 12.25 மணியளவில் உதவி கோரி அழைப்பு வந்ததாகவும், சம்பவ இடத்திலிருந்து ஒருவர் டான் டோக் செங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் சிங்கப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிகளில் மாணவர்களின் ஒழுக்கம் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பு குறித்து பல்வேறு தரப்பினரும் கவலை தெரிவித்து வருகின்றனர். சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts