TamilSaaga

சிங்கப்பூர் பயணிகளுக்கு சூப்பர் செய்தி! காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி! புதிய தானியங்கி குடிநுழைவு முறை அறிமுகம்!

சிங்கப்பூர்: வெஸ்ட் கோஸ்ட் மற்றும் மரினா சவுத் படகுத்துறைகள் வழியாக சிங்கப்பூர் வரும் பயணிகள் இனி விரைவாக குடிநுழைவுச் சோதனையை முடிக்க முடியும். இதற்காக, 2027 ஆம் ஆண்டு முதல் தானியங்கி குடிநுழைவுச் சோதனை முறைகள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளன.

திட்டமிடப்பட்டுள்ள மேம்பாட்டுப் பணிகள் நிறைவடைந்தவுடன் இந்த தானியங்கி முறை செயல்பாட்டுக்கு வரும் என்று குடிநுழைவு மற்றும் சோதனைச்சாவடி ஆணையம் தெரிவித்துள்ளது. தற்போது, இந்த படகுத்துறைகளில் அதிகாரிகள் மூலம் குடிநுழைவுச் சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவை படிப்படியாக தானியங்கி சோதனைச் சாவடிகளாக மாற்றப்படும். மேம்பாட்டுப் பணிகள் நடைபெறும் காலத்திலும் தற்போதைய சோதனைச் சாவடிகள் தொடர்ந்து இயங்கும்.

புதிய முறையின் கீழ், பயணிகள் தங்கள் பாஸ்போர்ட்டை ஸ்கேன் செய்து, முகம் மற்றும் கண் அடையாளங்களைச் சரிபார்க்க வேண்டும். இந்த தானியங்கி முறை அமல்படுத்தப்படுவதன் மூலம், குடிநுழைவு அதிகாரிகளை வேறு பணிகளுக்கு நியமிக்க முடியும். அவர்கள் பயணிகளின் விவரங்களை ஆராய்ந்து, கூடுதல் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டியவர்களை அடையாளம் காண்பார்கள்.

இதற்கிடையே, சாங்கி பாயிண்ட் படகு முனையத்திலும் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. எனினும், அங்கு தானியங்கி குடிநுழைவு முறை கொண்டுவரப்படுமா என்பது குறித்து உறுதியான தகவல் இல்லை.

கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி நிலவரப்படி, சுமார் 14 மில்லியன் பயணிகள் பாஸ்போர்ட் இல்லாமல் சிங்கப்பூரின் ஆகாய மற்றும் கடல் எல்லைகளைக் கடந்துள்ளனர் என்று குடிநுழைவு மற்றும் சோதனைச்சாவடி ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த புதிய தானியங்கி முறை, அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையை திறம்பட கையாள உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts