லிட்டில் இந்தியாவிற்கு அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென தீ பற்றியதை அடுத்து கட்டடத்தில் உள்ள வீடுகளில் இருந்து சுமார் 20க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டனர். இச்சம்பவம் பஃபல்லோ ரோட்டில் அமைந்துள்ள 662 ஆம் பிளாக்கின் மூன்றாவது தளத்தில் செவ்வாய்க்கிழமை இரவு சுமார் 8 மணி அளவில் நடைபெற்றதாக தெரியவந்துள்ளது.
திடீரென்று ஏற்பட்ட தீயால் வீட்டில் சமையலறையிலும், ஹாலிலும் உள்ள பொருட்கள் பற்றி எரிந்த நிலையில் ஆண் ஒருவரை காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து பத்திரமாக மீட்டனர். வீடு முழுவதும் விரைவாக பரவிய தீயின் காரணமாக ஜன்னல் வழியே கரும்புகை வெளியேறியது. எனினும் உயிர் சேதம் எதுவும் ஏற்படாமல் சிங்கப்பூர் தற்காப்பு படை வீரர்கள் பத்திரமாக கட்டிடத்தில் உள்ளவர்களை மீட்டனர்.
சுமார் எட்டு மணி அளவில் சம்பவம் ஏற்பட்ட நிலையில் 8. 45 மணிக்குள் தீயானது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. எனவே லிட்டில் இந்தியா MRT நிலையத்திற்கு அருகே தீயணைப்பு வண்டிகள், காவல்துறை வாகனங்கள் ,குடிமை தற்காப்பு படை வீரர்களின் வாகனங்கள் ஆகியவை சூழ்ந்து ஒரே பரபரப்பாக காணப்பட்டது. விபத்தில் இருந்து பத்திரமாக காப்பாற்றிய தற்காப்பு படை வீரர்களுக்கு சிங்கப்பூர் மக்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.