Tirupati Temple: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜனவரி 10 முதல் 19 வரை சொர்க்கவாசல் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த 10 நாட்களில் பக்தர்களுக்கு தரிசன அனுமதி வழங்கப்பட்டு, முதல் மூன்று நாள்களுக்கான 1,20,000 இலவச தரிசன டிக்கெட்டுகள் இன்று அதிகாலை 5 மணிக்கு வழங்கப்படும் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதற்காக நேற்றே 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர். இதனால் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. பைராகி பட்டேடா பகுதியில் 4,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் காத்திருந்தனர். அவர்களை வரிசையில் செல்ல போலீசார் அனுமதித்த போது, ஒருவரை ஒருவர் முண்டியடித்துக்கொண்டு சென்றனர். இதனால் ஏற்பட்ட கடுமையான நெரிசலில் பலர் கீழே விழுந்தனர்.
இதை பெற ஏராளமான மக்கள் கோவில் வளாகத்தில் கூடியிருந்தனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். மேலும், 30 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த துயரச் சம்பவம் ஜனவரி 8ஆம் தேதி, புதன்கிழமை, பக்தர்கள் டிக்கெட்டுகள் பெற காத்திருந்தபோது ஏற்பட்டுள்ளது.
திருப்பதியில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சமூக ஊடகங்களில் பரவி வரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இந்த சம்பவத்தின் கடுமையை வெளிப்படுத்துகின்றன. இந்த சம்பவம் குறித்து மக்கள் தங்களது வருத்தத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். அரசு மற்றும் கோயில் நிர்வாகம் மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. கடுமையாக காயமடைந்தவர்களின் உயிரை காப்பாற்ற அங்கிருந்த பக்தர்கள், கோவில் நிர்வாகத்தினர் மற்றும் காவல் துறையினர் எடுத்த முயற்சிகளின் வீடியோக்கள் மனதை உலுக்கும் வகையில் உள்ளன.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) வைகுண்ட ஏகாதசி விழாவிற்கான தரிசன டோக்கன்களை விநியோகிக்க ஜனவரி 9ஆம் தேதி சிறப்பு கவுண்டர்கள் அமைத்தது. இந்த தரிசன டோக்கன்கள் விஷ்ணு நிவாசம் கோயிலுக்கு அருகிலுள்ள பைரகிபட்டேடாவில் உள்ள MGM உயர்நிலைப் பள்ளியில் பக்தர்களுக்கு வழங்கப்பட்டன.
புதன்கிழமை காலையிலிருந்தே ஆயிரக்கணக்கான பக்தர்கள் கவுன்டர்களில் தரிசன டோக்கன்களை பெற வரிசையில் நிற்கத் தொடங்கினர். கூட்டம் அதிகரித்த நிலையில், சரியான கட்டுப்பாடு இல்லாமையால் நெரிசல் ஏற்பட்டதாகத் தெரியவந்தது. மாலையில் கூட்டம் அதிகரித்து தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில், ஒரு பெண் உடல்நிலை சரியில்லாமல் மயக்கமடைந்துள்ளார். அவரை மீட்பதற்காக கோயில் நிர்வாகம் ஒரு கதவை மட்டும் திறந்துள்ளது. இதனால், ஏற்கனவே அதிகமாக இருந்த கூட்டம் ஒரே நேரத்தில் முன்னோக்கிச் செல்ல முயன்றதால் கட்டுக்கடங்காத கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த நெரிசலில் சிக்கி பலர் மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், தேவஸ்தான வாரிய உறுப்பினர் பானு பிரகாஷ் பக்தர்களிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார். அவர் கூறுகையில், “இந்த சம்பவம் எதிர்பாராதது. இதில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன். இந்த சம்பவம் ஏற்படக் காரணமாக இருந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்தக் கோரச் சம்பவம் குறித்து வேதனை தெரிவித்துள்ளார். “திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பக்தர்கள் உட்பட அப்பாவி மக்கள் உயிரிழந்த சம்பவம் வேதனை அளிக்கிறது. இந்த எதிர்பாராத துயர சம்பவத்தில் தங்கள் உறவுகளை இழந்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேம். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விழைகிறேன்” தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.