சில சம்பவங்கள் நம்மை வெகுவாக பாதித்துவிடும். அவ்வையார் சொல்வது போல கொடிதிலும் கொடிது இளமையில் வறுமை என்றால் நினைத்துப் பார்க்கவே அது கொடுமையாக இருக்கும். அதிலும், ஒரு தாய் இல்லாமல், வறுமையுடன் வாழ்வது என்றால் நினைத்துப் பாருங்கள். எல்லாவற்றையும் விட, அந்த தாய் அந்த பிள்ளையை புறக்கணித்து, பிரிந்து போயிருந்தால்..? இப்போது அந்த குழந்தையின் மனநிலையை நினைத்துப் பாருங்கள்..
இளமையில் வறுமை,
தாயின் புறக்கணிப்பு
ஆம்! அப்படிப்பட்ட குழந்தைகளை பற்றியும், அவர்களுடைய தந்தையின் அவஸ்தையைப் பற்றியும் சொல்லும் செய்தி இது.
இந்திய நாட்டின் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவர், சியோனி மாவட்டத்தில் கன்ஹர்கான் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் மிக மிக வறுமையான குடும்ப பின்னணியைச் சேர்ந்தவர்கள். எந்த அளவுக்கு என்றால், தங்களுக்கென்று தனி வீடு இல்லாமல், தங்களது இரு குழந்தைகளுடன் நடைபாதையில் வசித்து வந்த அளவுக்கு வறுமை.
இந்த சூழலில், அப்பெண்ணுக்கு வேறு ஒரு நபருடன் பழக்கம் ஏற்பட்டு, தனது குழந்தைகளையும், கணவரையும் விட்டு சென்றுவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மனைவி பிரிந்து சென்ற பிறகு, அவரை தேடும் முயற்சியில் ஈடுபட விரும்பாத ராஜேஷ், வாழ்வாதாரத்துக்காக மத்திய பிரதேச மாநிலத்துக்கு வந்துவிட்டார்.
அங்கு பல்வேறு கூலி வேலைகளை செய்துவந்த ராஜேஷ், பிறகு ரிக்ஷா ஓட்டத் தொடங்கிவிட்டார். ஆனால், குழந்தைகளை பராமரிக்க யாரும் இல்லாததால், தனது கைக்குழந்தையை சுமந்து கொண்டே ரிக்ஷா ஓட்டி வருகிறார். ஒரு கையில் குழந்தையை சுமந்து கொண்டும், மறு கையில் ரிக்ஷாவை ஓட்டிக் கொண்டும் இவர் சென்ற போது, பொது மக்களில் ஒருவர் இதனை வீடியோ எடுத்து சமூக தளங்களில் பகிர, அதனை ஆயிரக்கணக்கானோர் பார்த்து, தங்கள் வேதனைகளை பதிவு செய்துள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் தான் அவர் தற்போது ரிக்ஷா ஓட்டி வருகிறார். பலரும் இந்த வீடியோவைப் பார்த்து, இவருக்கு நிச்சயம் உதவ வேண்டும் என்ற நோக்கில், ராஜேஷை தொடர்பு கொள்ள முயற்சித்து வருகின்றனர். அதிலும், குழந்தைக்கு ஒட்டுத்துணியில்லாமல் அவர் அதனை கையில் ஏந்திக் கொண்டு ரிக்ஷா ஓட்டும் வீடியோ காண்போரை ரணமாக்குகிறது.