சுற்றுலா மூலம் பொருளாதாரத்தை உயர்த்தும் நோக்கில், சுற்றுலா விசா வழங்குவதை மீண்டும் தொடங்குவதன் மூலம் சர்வதேச பயணிகளுக்கு பெருந்தொற்று தடையை நீக்க அண்டை நாடான இந்திய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. வரும் நவம்பர் 15 முதல் இந்தியா வரும் வெளிநாட்டவர்களுக்கு விவகார அமைச்சகம் புதிய சுற்றுலா விசாக்களை வழங்கத் தொடங்கும். வாடகை விமானங்களில் (Chartered Flights) வருவோருக்கு அக்டோபர் 15 முதல் விசா வழங்கப்படும்.
உலக அளவில் பரவிய தொற்றுநோயைத் தொடர்ந்து சுற்றுலா விசா வழங்குவது நிறுத்தப்பட்டு ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், வெளிவிவகார அமைச்சகம், சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம், சுற்றுலாத்துறை மற்றும் மாநில அரசுகள் போன்ற குழுக்களுடன் கலந்துரையாடியதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
“MHA பல மாநில அரசுகளிடமிருந்தும், சுற்றுலாத் துறையின் பல்வேறு பங்குதாரர்களிடமிருந்தும் சுற்றுலா விசாக்களைத் தொடங்குவதற்காகவும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிற்கு வருவதை அனுமதிப்பதற்காகவும் பிரதிநிதித்துவங்களைப் பெற்று வருகிறது. விவாதங்களுக்குப் பிறகு நாங்கள் பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்த முடிவு செய்துள்ளோம்” என்று மூத்த அமைச்சர் ஒருவர் கூறினார். சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் மற்றும் சுற்றுலாப் பயணிகள், இந்தியாவில் வகுக்கப்பட்டுள்ள கோவிட் நெறிமுறைகளைப் பின்பற்றுமாறு மாநிலங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும். அவர்களை நாட்டிற்கு அழைத்து வரும் கேரியர்கள் மற்றும் பிற பங்குதாரர்களும் அந்த வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அந்த அதிகாரி கூறினார்.
கடந்த ஆண்டு தொற்றுநோயைத் தொடர்ந்து வெளிநாட்டினருக்கான அனைத்து விசாக்களும் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டது. வளர்ந்து வரும் சூழ்நிலையைப் பரிசீலித்தபின், வெளிநாட்டவர்கள் இந்தியாவில் நுழைவதற்கும் தங்குவதற்கும் சுற்றுலா விசாவைத் தவிர வேறு எந்த விசாவையும் பெற அரசாங்கம் அனுமதித்தது. இதனையடுத்து அக்டோபர் 15 முதல் வாடகை விமானங்களில் நவம்பர் 15 முதல் வாடகையற்ற விமானங்கள் மூலம் இந்தியா வர அனுமதி அளிக்கப்பட்டிள்ளது.