சிங்கப்பூர் உள்பட வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வரும் வெளிநாட்டு பயணிகள் கொண்டு வரும் தங்கம் மற்றும் வெள்ளி உள்ளிட்ட நகைகளின் மதிப்பு 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் இருந்தால் அதற்கு அவர்கள் சுங்கவரி செலுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சரவணன் தன் தீர்ப்பில் கூறியுள்ளார்.
மேலும் 50 ஆயிரம் ரூபாய் மதிப்பை விட அதிகமான தங்கம் உள்ளிட்ட பொருட்களை இந்தியாவிற்குள் கொண்டு வரும்பொழுது, அதற்கான உறுதிமொழியையும் சம்பந்தப்பட்டவர்கள் சுங்கத் துறையிடம் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதி அந்த உத்தரவில் தெரிவித்துள்ளார்.
2017ம் ஆண்டு நடந்த சம்பவம்
கடந்த 2017ம் ஆண்டு இலங்கையை சேர்ந்த சந்திர சேகரம், விஜயசுந்தரம் அவரின் மனைவி மற்றும் குழந்தை உள்ளிட்ட நால்வர் சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கினார். “ஆன்மிக சுற்றுலா பயணம்” மேற்கொண்டு இந்தியாவுக்கு வந்த அவர்களிடம் 1,594 கிராம் எடை கொண்ட 43 லட்சத்து 90 ஆயிரத்து 756 மதிப்புள்ள தங்க நகைகள் அணிந்து கொண்டு வந்தனர்.
மேலும் அவர்களுடன் 112 வெளிநாட்டு மது பாட்டில்களையும் எடுத்துக் கொண்டு வந்துள்ளனர். இதையடுத்து சென்னை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் அவர்களுக்கு அபராதம் விதிக்க, அதை எதிர்த்து சந்திரசேகரம், விஜயசுந்தரம் மற்றும் அவரது மனைவி ஆகிய மூவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்நிலையில் தற்போது அந்த மனு, நீதிபதி சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தது, அப்போது மனுதாரர் சார்பாக வழக்காடிய வழக்கறிஞர், வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் தங்கம் வெள்ளி உள்ளிட்ட பொருட்களை கொண்டு வந்தால் அதற்கு சுங்க வரி செலுத்த தேவையில்லை என 2014ம் ஆண்டு கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி தங்களுக்கு விலக்கு அளித்து அபராதத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் வாதிட்டார், ஆனால் மனுதாரர் தரப்பு வாதங்களை ஏற்க மறுத்துவிட்ட நீதிபதி சரவணன், 2016ம் ஆண்டு புதிய விதிகள் கொண்டுவரப்பட்டதாகவும். அதன்படி வெளிநாட்டிலிருந்து வரும் நபர்கள் தங்கம், வெள்ளி உள்ளிட்ட நகைகள் 50,000 ரூபாய்க்கு மேல் மதிப்பு இருந்தால் அதற்கு சுங்கவரி செலுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.
ஆன்மீக சுற்றுலா வந்தவர்கள் இவ்வளவு நகை மற்றும் மதுபாட்டில்களை கொண்டுவந்தது ஏற்றுக்கொள்ளமுடியாது ஒன்று என்றும் அவர் தெரிவித்தார்.