நேற்று ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி மாலை, ஆங் மோ கியோவில் உள்ள ITE கல்லூரி சென்ட்ரல் அருகே சாலைகளுக்கு இடையே இருந்த தடுப்பு கம்பிகள் மீது மோதிவிட்டு கார் ஓட்டுநர் ஒருவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். மேலும் அந்த கருப்பு கார் சாலையின் மறுபுறத்தில், போக்குவரத்துக்கு எதிர் திசையை பார்த்தபடி நிறுத்தப்பட்டது தெரியவந்துள்ளது.
மதர்ஷிப் செய்தி நிறுவனம் வெளியிட்ட இந்த செய்தியின் அடிப்படையில், தடுப்பு கம்பிகளில் மோதிய பிறகு அந்த ஓட்டுநர் அந்த கருப்பு காரை அங்கேயே விட்டுவிட்டு தப்பிச்சென்றது தெரியவந்துள்ளது. மதர்ஷிப்பின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக, ஆகஸ்ட் 10, இரவு 8:48 மணியளவில் ஆங் மோ கியோ அவென்யூ 5 வழியாக யியோ சூ காங் சாலையை நோக்கி இரண்டு கார்கள் மற்றும் ஒரு டாக்ஸி சென்றபோது விபத்து ஏற்பட்டதாக தங்களுக்கு தகவல் கிடைத்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும் சம்பவ இடத்திற்கு போலீசார் வருவதற்கு முன்பாக ஒரு கார் ஓட்டுநர் அந்த இடத்தில் இருந்து கால்நடையாக தப்பியோடியதாக போலீசார் உறுதிப்படுத்தினார். 34 வயதான அந்த டிரைவர் பின்னர் அடையாளம் காணப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதற்காக அவர் விசாரிக்கப்பட்டு வருகின்றார். நல்வாய்ப்பாக இந்த சம்பவத்தில் யாரும் எவ்வித காயமும் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.