சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் வேலை பார்ப்பது என்பது இன்றளவும் பல நாடுகளைச் சேர்ந்த ஊழியர்களுக்கு ஒரு வரமாகவே திகழ்ந்து வருகின்றது. அருமையான வேலை சூழல், கை நிறைய சம்பளம், மேம்பட்ட வாழ்க்கை முறை போன்ற பல சிறப்பான அம்சங்கள், பல நாட்டு தொழிலாளர்களை சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வேலை செய்ய ஊக்கப்படுத்துகிறது.
அதேபோல உலகின் பிற நாடுகளில் இல்லாத பல வளமான விஷயங்களை சிங்கப்பூர், துபாய் போன்ற நாடுகள் தன்னகத்தே கொண்டுள்ளது. இது ஒருபுறமிருக்க இன்றளவும் வெளிநாடுகளில் வேலை பார்த்துவிட்டு தாயகத்துக்கு திரும்பும் பலரிடமும் அவருடைய உறவினர்கள் கேட்கும் ஒரு கேள்வி ‘எனக்கு என்னப்பா வாங்கிட்டு வந்த” என்பதுதான். வெளிநாடுகளை பொருத்தவரைக்கும் பிஸ்கட் முதல் தங்கம் வரை, தரமான பல பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் இந்த பதிவில் வெளிநாடுகளில் இருந்து தங்களுடைய தாயகத்திற்கு தொழிலாளர்கள் தங்கம் வாங்கி செல்வதை ஏன் விரும்புகின்றனர் என்றும். அதில் உள்ள நன்மை தீமைகளை பற்றியும் காணலாம்.
வெளிநாடுகளில் தங்கம் வாங்குவதில் உள்ள சாதகம்
வெளிநாடுகளில் வாங்கும் தங்கத்தை பொருத்தவரை 22 கேரட் தரம் என்பது மிகத் துள்ளியமாக கணிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சிங்கப்பூர் போன்ற சில நாட்டினுடைய அரசுகள் தங்கள் நாட்டில் விற்பனையாகும் தங்கத்தின் தரத்தை அவ்வப்போது சரி பார்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த 22 கேரட் தரத்தை சோதனை செய்ய அரசு பிரத்தியேகமான குழுவை அமைத்து செயல்படுத்துகிறது.
அதேபோல சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வாங்கப்படும் தங்கத்தை விற்பனை அல்லது அடமானம் வைக்கும் பட்சத்தில் அதற்கான சேதாரமும் மிகக் குறைந்த அளவிலேயே கணக்கிடப்படுகிறது. இந்தியா போன்ற உலகின் பிற நாடுகளை ஒப்பிடுகையில் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வாங்கிய தங்கத்தை அங்கு மீண்டும் விற்பனை செய்யும் போது அதற்கான சேதாரம் மிகக் குறைந்த அளவிலேயே கணக்கிடப்படுவது குறிப்பிடத்தக்கது. வெளிநாடுகளில் மக்கள் தங்கத்தை வாங்குவதற்கு இது ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
வெளிநாடுகளில் தங்கம் வாங்குவதில் உள்ள சிக்கல் என்ன?
இந்தியா போன்ற நாடுகளுக்கு, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் இருந்து வரும் மக்கள் தங்கத்தை வாங்கி வரும்போது அதற்காக சுங்கத்துறை அதிகாரிகளிடம் அளிக்கும் அபராதம் என்பது மிகவும் அதிகமாக இருப்பதாக கருதப்படுகிறது. மேலும் இந்த நிகழ்வு வெளிநாடுகளில் இருந்து தங்கம் வாங்கி வருபவர்களுக்கு ஒரு மிகப்பெரிய பாதகமாக பார்க்கப்படுகிறது.