சிங்கப்பூரில் இயங்கி வரும் ஜப்பானைச் சேர்ந்த உணவகம் ஒன்று, வாரத்தின் வேலை நாட்களை குறைத்ததை அடுத்து, ஆட்கள் பற்றாக்குறை பிரச்சனையை கச்சிதமாக தீர்த்துள்ளது.
கடந்த 2020 அக்டோபரில் ஆர்ச்சர்ட் சென்ட்ரலில் Tenya Orchard Central எனும் ஜப்பானிய உணவகம் திறக்கப்பட்டது. முதல் நாளில் இருந்தே அங்கு ஊழியர்களின் பற்றாக்குறை நிலவியது. மேலும் ஊழியர்கள் பெரும்பாலும் கூடுதல் நேரம் வேலை செய்ய வேண்டியிருந்தது. இதனால், நிலையான ஊழியர்கள் கிடைப்பதில் சிக்கல் இருந்தது.
வாரத்திற்கு 44 மணி நேரமான பொதுவான வேலை நேரம் என்று சிங்கப்பூர் மனிதவளத்துறை அமைச்சகம் வகுத்துள்ள விதிமுறைகளை விட, இந்த ரெஸ்டாரன்டின் ஊழியர்கள் அதிக நேரம் உழைப்பதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
சில ஊழியர்கள் வாரத்தில் 50 முதல் 55 மணிநேரம் வரை வேலை செய்கிறார்கள்.
இதனால், ஊழியர்கள் பணிக்கு வருவதும், பிரஷர் தாங்காமல் போவதுமாக இருந்த நிலையில், அந்த உணவகத்தின் உரிமையாளர்கள் கூடி பேசி ஒரு முடிவை எடுத்தனர்.
நிர்வாகத்தின் பல கட்ட விவாதங்களுக்குப் பிறகு, ஜூன் 2022 முதல் தகுதியான ஊழியர்களுக்கு நான்கு நாள் மட்டும் வேலை நாள் என்ற விதியை நடைமுறைப்படுத்த அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
அதுமட்டுமின்றி, அனைத்து ஊழியர்களுக்கும் 10 சதவீதம் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது.
இதுகுறித்த விளம்பரங்களையும் அந்நிறுவனம் வெளியிட்டது. மொத்தம் 8 பணிகளுக்கு ஆட்கள் கிடைக்காமல் தடுமாறி வந்த நிறுவனம், இந்த விளம்பரத்தை வெளியிட்ட சில மணி நேரங்களிலேயே அனைத்து 8 காலியிடங்களுக்கும் ஆட்களை தேர்வு செய்துவிட்டது.
வாரத்திற்கு 4 நாட்களே பணி என்றவுடன், ஏகப்பட்ட விண்ணப்பங்கள் குவிந்துவிட்டது.