அன்னையர் தினம் இன்று உலக அளவில் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது, இந்நிலையில் சிங்கப்பூரில் உள்ள சமூக சுயஉதவி குழுவான SINDAவின் புதிய முயற்சி ஒன்று, பெண்கள் ஒரு சில பாரம்பரியப் பணிகளைச் செய்ய வேண்டும் என்ற அடிப்படை எண்ணத்தை அகற்றுவதை நோக்கமாக கொண்டுள்ளது என்று பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா நேற்று சனிக்கிழமை (மே 7) கூறினார்.
“பெண்கள் தங்கள் மனதில் நினைத்த எதையும் செய்ய முடியும் என்ற நமபிக்கையை விதைக்க நாங்கள் விரும்புகிறோம், ஆனால் மக்களாகிய நீங்கள் அவர்களுக்கு உதவ வேண்டும் மற்றும் அவர்களை ஊக்குவிக்க வேண்டும்,” என்று அவர் மேலும் கூறினார்.
சிங்கப்பூர் இந்திய வளர்ச்சி சங்கத்தின் (SINDA) தலைவரான திருமதி. இந்திராணி, SINDAவின் “Let Her Shine” என்ற முன்னெடுப்பை தொடங்கி வைத்தபோது இந்த கருத்துக்களை பேசினார். நமது சமூகத்தில் 7 முதல் 30 வயதுடைய சிங்கப்பூர் இந்தியப் பெண்கள் எதிர்கொள்ளும் தடைகளை குறித்து அவர் பேசினார்.
இளம் பெண்களின் தன்னம்பிக்கை, திறன்கள், வாய்ப்புகள் மற்றும் வழிகாட்டுதல்களுடன் இணைந்து, தங்களைப் பற்றிய உலகக் கண்ணோட்டத்தை வடிவமைக்கவும், அவர்கள் என்ன செய்ய முடியும் என்பதை வடிவமைக்கவும் SINDA சுமார் 20 தேசிய ஏஜென்சிகள் மற்றும் பெண்கள் குழுக்களுடன் இணைந்து செயல்படும் என்றார் அவர்.
பெண்களின் தேவைகளுக்குப் பொருத்தமானதாக இருக்க இந்த முயற்சியானது தொடர்ந்து மறுபரிசீலனை செய்யப்படும் என்று சிSINDA வெளியிட்ட ஒரு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடந்த மாதம் பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட சிங்கப்பூர் பெண்கள் மேம்பாடு குறித்த வெள்ளை அறிக்கைக்கு இணங்கவும் ஆதரவாகவும் இது இருந்தது.
SINDAவின் தலைமை நிர்வாகி அன்பரசு ராஜேந்திரன் கூறுகையில், சமூகத்தை மேம்படுத்தும் SINDAவின் பணிகளில் பெண்கள் அதிகாரம் என்பது முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும் என்றார். “நாம் பெண்களுக்கு சரியான வளங்களை வழங்க வேண்டும். Let Her Shine முன்னெடுப்பு பெண்களின் கனவுகளை மெய்ப்பட உதவும் என்றும் அவர் மேலும் கூறினார்.
அன்னையர்களை போற்றும் இந்த நல்ல நாளில் சிங்கப்பூர் அரசு சிங்கப்பூர் இந்திய பெண்களுக்கு உதவும் வகையில் ஒரு முன்னெடுப்பதை துவங்கியுள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.