சிங்கப்பூரில் புத்தாண்டு தினத்தன்று கிளார்க் குவேயில் நூற்றுக்கணக்கான மக்கள் தொற்று பாதுகாப்பு விதிகளை மீறி ஒன்று கூடியது பெரும் பிரச்சனையாக வெடித்தது. இந்நிலையில் இதில் ஈடுபட்ட இரண்டு இந்திய வம்சாவளி மாணவர்கள் நீதிமன்றத்தில் அவர்களுடைய குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவரான வர்மா புல்கிட் (வயது 22), முகமூடி அணியாமல் அங்கிருந்த கூட்டத்தின் மீது ஷாம்பெயின் தெளிக்கும் காட்சி கேமராவில் சிக்கியது, ஆகையால் பெருந்தொற்று விதிமுறைகளை மீறியதற்காக தற்போது அவருக்கு $ 3,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அதே போல கிளார்க் குவேயில் அதே நாளன்று பிறந்தநாள் விழாவைக் கொண்டாடிய 10 நண்பர்கள் கொண்ட குழுவில் இருந்த ஹர்ஜாஸ் சிங்குக்கு $2,000 அபராதம் விதிக்கப்பட்டது. அதீஷ் அசுதோஷ் ராவ், 22, மற்றும் ஷ்யாமா குமார் ஷரத், 19 உட்பட, எட்டு பேருடன் இந்த இருவரும் ஒன்றுகூடி புத்தாண்டு மற்றும் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
வர்மாவின் பிறந்தநாளைக் கொண்டாடவும், கிளார்க் குவேயில் புத்தாண்டைக் கொண்டாடவும் அவர்கள் விரும்பியுள்ளனர். இந்நிலையில் அவர்கள் ஜனவரி 1ம் தேதி வழக்கமாக நடக்கும் கவுண்டவுனுக்கு முன்னதாக கூடியிருந்த ஒரு பெரிய கூட்டத்தில் இணைந்துள்ளனர் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. பல இளைஞர்கள் தடையை மீறி கூட்டமாக கூடிய விஷயம் அறிந்ததும் சிறிது நேரத்தில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த கூட்டத்தை கலைத்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கை என்பது வைரஸின் பரவலைத் தடுக்க கட்டாயப்படுத்தப்பட்டுள்ளன. ஆகியால் மக்கள் அதற்கு ஒத்துழைப்பு அளிக்கவேண்டியது அவசியம் என்று கூறினார். அன்று கிளார்க் குவேயில் நடந்த அந்த பெரிய அளவிலான கூட்டத்தில் ஈடுபட்டதற்காக குறைந்தது 10 பேர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.