லண்டனில் இருந்து மும்பை நோக்கி பயணித்த விர்ஜின் அட்லாண்டிக் விமானம் (VS358), திடீர் மருத்துவ அவசரநிலை காரணமாக துருக்கியின் தியர்பாகிர் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதனால், இந்தியர்கள் உட்பட 250-க்கும் மேற்பட்ட பயணிகள் சுமார் 40 மணி நேரமாக அங்கு சிக்கித் தவிக்கின்றனர்.
விமானம் தரையிறங்கிய பின்னர் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், பயணிகள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட இந்த விமானம், மும்பையில் அதிகாலை 1:40 மணிக்கு தரையிறங்குவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால், நடுவானில் ஒரு பயணிக்கு ஏற்பட்ட மருத்துவ அவசரநிலை காரணமாக, துருக்கியில் உள்ள தியர்பாகிர் விமான நிலையத்தில் மாலை 7 மணியளவில் தரையிறக்கப்பட்டது. தரையிறங்கிய பின்னர், விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாகவும், அதை சரிசெய்ய ஆய்வு நடைபெற்று வருவதாகவும் விர்ஜின் அட்லாண்டிக் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.
விர்ஜின் அட்லாண்டிக் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பே எங்களுக்கு முதல் முன்னுரிமை. இந்த சம்பவத்தால் ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிப்பு கோருகிறோம். தேவையான தொழில்நுட்ப ஒப்புதல்கள் கிடைத்தவுடன், ஏப்ரல் 4 ஆம் தேதி உள்ளூர் நேரப்படி மதியம் 12 மணிக்கு விமானம் மும்பைக்கு புறப்படும். ஒப்புதல் கிடைக்காவிட்டால், மாற்று விமானம் மூலம் பயணிகள் அனுப்பப்படுவர். தற்போது துருக்கியில் பயணிகளுக்கு ஹோட்டல் மற்றும் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், சமூக வலைதளங்களில் பயணிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பகிர்ந்த தகவல்கள் வேறு கதையைச் சொல்கின்றன. 300-க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு ஒரே ஒரு கழிப்பறை மட்டுமே இருப்பதாகவும், குளிர்ந்த சூழலில் பெட்ஷீட் கூட வழங்கப்படவில்லை என்றும் பலர் புலம்பியுள்ளனர். வெளியான புகைப்படங்களில், பயணிகள் விமான நிலையத்தில் நின்று கொண்டிருப்பதும், தரையில் படுத்து உறங்குவதும் தெரிகிறது. “ஹோட்டல் வசதி ஏற்படுத்தப்படவில்லை, உணவு போதுமானதாக இல்லை,” என பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த சம்பவம் விமான பயணங்களின் நம்பகத்தன்மை குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளது. தற்போது, பயணிகளை மீட்க இந்திய தூதரகமும் துருக்கி அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.