சிங்கப்பூர்: சிங்கப்பூரில் பணிபுரியும் ஊழியர்கள் பணியின்போது எதிர்பாராத விதமாக விபத்து நேரிட்டாலோ அல்லது வேலையின் காரணமாக நோய்வாய்ப்பட்டாலோ, அவர்களுக்குரிய இழப்பீட்டுத் தொகையை பெற்றுத் தருவதே பணியிடக் காயம் இழப்பீட்டுச் சட்டம் (Work Injury Compensation Act – WICA) ஆகும். இந்தச் சட்டம், ஊழியர்கள் சிவில் வழக்குகள் எதையும் தாக்கல் செய்யாமல், விரைவாகவும் சுலபமாகவும் இழப்பீடு பெறுவதற்கான வழிமுறைகளை வழங்குகிறது.
சாதாரண சட்ட நடைமுறைகளுக்கு மாற்றாக, WICA வேலை தொடர்பான காயங்கள் மற்றும் நோய்களுக்கான இழப்பீட்டு உரிமைகோரல்களை விரைவாகத் தீர்க்க உதவுகிறது. வேலை நேரத்தில் ஏற்படும் விபத்துக்கள் அல்லது வேலையின் காரணமாக உருவாகும் நோய்கள் ஆகியவற்றிற்கு WICA-ன் கீழ் ஊழியர்கள் உரிமைக் கோர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இதற்காக வழக்கறிஞரை நியமிக்க வேண்டிய அவசியமும் இல்லை.
WICA-ன் கீழ் யார் உரிமைக் கோர முடியாது?
பின்வரும் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் WICA-ன் கீழ் இழப்பீடு கோர முடியாது:
- சுதந்திர ஒப்பந்தக்காரர்கள் (Independent contractors) மற்றும் சுயதொழில் செய்பவர்கள்.
- வீட்டு வேலை செய்யும் பணியாளர்கள்.
- சிங்கப்பூரின் ஆயுதப்படை, காவல்துறை, சிவில் பாதுகாப்புப் படை, போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் சிறைத்துறை அதிகாரிகள்.
WICA-ன் கீழ் யார் உரிமைக் கோரலாம்?
பின்வரும் சூழ்நிலைகளில் உள்ள ஊழியர்கள் WICA-ன் கீழ் இழப்பீடு கோர தகுதி உடையவர்கள்:
- தற்போது அந்த குறிப்பிட்ட முதலாளியிடம் வேலை செய்யாதவர்கள் அல்லது பணி அனுமதி ரத்து செய்யப்பட்டிருந்தாலும் உரிமைக் கோரலாம்.
- நீங்கள் வெளிநாட்டில் பணிபுரிந்தபோது விபத்து ஏற்பட்டிருந்தாலும் இழப்பீடு கிடைக்கும்.
- வீட்டிலிருந்து வேலை செய்யும் போது அல்லது முதலாளியால் ஒப்புக்கொள்ளப்பட்ட பணியை மேற்கொள்ளும் போது விபத்து ஏற்பட்டால் உரிமைக் கோர முடியும்.
விபத்துகளின் வகைகள்:
WICA-ன் கீழ் இழப்பீடு பெறக்கூடிய சில விபத்து வகைகள் பின்வருமாறு:
- நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட பேருந்தில் வீட்டிற்கும் பணியிடத்திற்கும் இடையே பயணிக்கும் போது ஏற்படும் விபத்துக்கள். (தனிப்பட்ட முறையில் பொதுப் போக்குவரத்தில் செல்லும் போது ஏற்படும் விபத்துக்கள் இதற்குள் அடங்காது).
- பணிக்குச் செல்லும் போது போக்குவரத்து விதிகளைப் பின்பற்றாமல் ஏற்படும் விபத்துக்களுக்கும் இழப்பீடு உண்டு.
- சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட கப்பலில் பணிபுரியும் மாலுமிக்கு, கப்பல் எங்கிருந்தாலும் வேலை சம்பந்தமான காயங்கள் ஏற்பட்டால் WICA-ன் கீழ் இழப்பீடு கிடைக்கும்.
- வேலை தொடர்பான சண்டையில் பாதிக்கப்பட்ட ஊழியர் போராட்டத்தில் ஈடுபடாதவராக இருந்தாலோ அல்லது தனிப்பட்ட தற்காப்பு முயற்சியின் போது காயம் அடைந்திருந்தாலோ இழப்பீடு பெற முடியும்.
- வேலையின் காரணமாக மாரடைப்பு அல்லது பக்கவாதம் போன்ற நோய்கள் ஏற்பட்டாலும் இழப்பீடு வழங்கப்படும்.
இழப்பீடு எவ்வாறு கிடைக்கும்?
WICA-ன் கீழ் பின்வரும் வகையான இழப்பீடுகள் ஊழியர்களுக்கு வழங்கப்படுகின்றன:
- மருத்துவ விடுப்பில் இருக்கும் போது முழு சம்பளம் (முதல் 60 நாட்களுக்கு).
- விபத்து நடந்த 61வது நாளில் இருந்து ஒரு வருடம் வரை சம்பளத்தில் 3ல் 2 பங்கு.
- மருத்துவச் செலவுகளுக்கான இழப்பீட்டுத் தொகை (விபத்து நடந்த ஒரு வருடத்திற்குள் கோரப்பட்டால் அதிகபட்சமாக 45,000 சிங்கப்பூர் டாலர்கள்).
- ஊனம் அல்லது உயிரிழப்பு ஏற்பட்டால் மொத்தமான இழப்பீட்டுத் தொகை.
உயிரிழப்பு மற்றும் நிரந்தர ஊனத்திற்கான இழப்பீட்டுத் தொகை:
பணியின் போது ஏற்பட்ட விபத்தில் ஊழியர் உயிரிழந்தால் வழங்கப்படும் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச இழப்பீட்டுத் தொகை:
ஆண்டு | குறைந்தபட்சம் (சிங்கப்பூர் டாலர்) | அதிகபட்சம் (சிங்கப்பூர் டாலர்) |
1 ஜனவரி 2020 முன் | $69,000 | $204,000 |
1 ஜனவரி 2020 முதல் | $76,000 | $225,000 |
பணியின் போது ஏற்பட்ட விபத்தில் ஊழியருக்கு நிரந்தர ஊனம் அல்லது நோய் ஏற்பட்டால் வழங்கப்படும் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச இழப்பீட்டுத் தொகை:
ஆண்டு | குறைந்தபட்சம் (சிங்கப்பூர் டாலர்) | அதிகபட்சம் (சிங்கப்பூர் டாலர்) |
1 ஜனவரி 2020 முன் | $88,000 | $262,000 |
1 ஜனவரி 2020 முதல் | $97,000 | $289,000 |