TamilSaaga

சிங்கப்பூரின் 6வது டாக்சி ஆபரேட்டர் GrabCab – ஏப்ரல் 9 முதல் சேவை!

சிங்கப்பூர்: வாடகை வாகனச் சேவைகளை வழங்கிவரும் பிரபல நிறுவனமான கிராப்புக்கு டாக்சிகளை இயக்குவதற்கான உரிமத்தை நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) வழங்கியுள்ளது. இதன் மூலம் கிராப், சிங்கப்பூரின் ஆறாவது டாக்சி நிறுவனமாக அதிகாரப்பூர்வமாக உருவெடுக்கிறது.

10 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் இந்த டாக்சி உரிமம், கிராப் நிறுவனத்தின் வாடகைச் சேவைப் பிரிவான கிராப்ரென்டல்சுக்குச் (GrabRentals) சொந்தமான கிராப்கேபுக்கு (GrabCab) வழங்கப்பட்டுள்ளது. இந்த உரிமம் இம்மாதம் ஒன்பதாம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று LTA புதன்கிழமை (ஏப்ரல் 2) தெரிவித்துள்ளது.

டாக்சி சேவை வழங்குவதற்கு கிராப்கேப் நிறுவனம் குறைந்தது 800 டாக்சிகளை வைத்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாகும். இதற்கேற்ப, தங்கள் வாகனங்களின் எண்ணிக்கையை படிப்படியாக அதிகரிக்க கிராப்கேபுக்கு மூன்று ஆண்டு கால அவகாசம் வழங்கப்படும் என்று LTA குறிப்பிட்டுள்ளது.

இந்த டாக்சி உரிமத்தின் மூலம், பொதுமக்கள் இனி முன்பதிவு செய்யாமலேயே சாலைகளில் கிராப் டாக்சிகளை நிறுத்திக்கொள்ள முடியும். கிராப்புக்கு உரிமம் வழங்கப்பட்டிருப்பதால், ஓட்டுநர்கள் மற்றும் பயணிகள் இரு தரப்பினருக்கும் கூடுதல் தெரிவுகள் கிடைக்கும் என்று LTA தெரிவித்துள்ளது. மேலும், இந்த உரிமம் டாக்சிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் என்றும் ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.

உரிமத்தின் அனைத்து நிபந்தனைகளையும் கிராப்கேப் நிறுவனம் முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும் என்று LTA வலியுறுத்தியுள்ளது. மேலும், ஆணையத்தின் பாதுகாப்பு விதிமுறைகளையும் நிறுவனம் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். அதோடு மட்டுமல்லாமல், கிராபின் கீழ் மட்டுமே சேவைகளை வழங்கும் வகையில் ஓட்டுநர்களுக்கான ஒப்பந்தங்கள் வரையப்படக்கூடாது என்றும் LTA தெரிவித்துள்ளது.

முன்பதிவு இல்லாமல் சாலையில் டாக்சி எடுக்கும் பயணிகளுக்கு கிராப் டாக்சிகள் எளிதில் அடையாளம் காணக்கூடிய வகையில் இருக்க வேண்டும். இதற்காக, கிராபின் டாக்சிகளின் மேல் டாக்சிகளுக்கான பதாகை கட்டாயம் வைக்கப்பட வேண்டும். கிராப்கேபின் அனைத்து வாகனங்களும் LTA-வின் முறையான அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும். பொதுவாக அனைத்து டாக்சிகளுக்கும் தற்போது உள்ள விதிமுறைகளை கிராப் நிறுவனமும் பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாங்கி விமான நிலையத்தில் பயணியை மிரட்டிய இந்தியர் குற்றச்சாட்டு பதிவு – இன்று நீதிமன்றத்தில் ஆஜராகிறார்

முன்னதாக, கிராப் நிறுவனம் டாக்சி துறையில் நுழைய முயற்சித்தது. கடந்த 2023 ஆம் ஆண்டு அந்நிறுவனம் டிரான்ஸ்கேப் டாக்சி நிறுவனத்தை வாங்க முயன்றது. இருப்பினும், சிங்கப்பூரின் போட்டித்தன்மை ஆணையம் அதற்கு எதிராக தீர்ப்பளித்ததால் அந்த முயற்சி கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது கிராப்புக்கு நேரடி டாக்சி உரிமம் வழங்கப்பட்டிருப்பது அந்நிறுவனத்திற்கு ஒரு புதிய மைல்கல்லாக கருதப்படுகிறது.

Related posts