சிங்கப்பூர் செயல்பாட்டு மேலாளர் ஒருவர் பணிக்காக 56 வெளிநாட்டு தொழிலாளர்களிடமிருந்து S$396,440 சிங்கப்பூர் டாலர்களை வசூலித்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் (MOM) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சிங்கையைச் சேர்ந்த 52 வயதான ஹோ சியாக் ஹாக் டெரிக் (Ho Chiak Hock Derrick) என்பவர், வெளிநாட்டு தொழிலாளர்களிடம் அவர்களின் வேலைக்காகவோ அல்லது Work pass renewal-க்காகவோ பணம் வசூலிப்பதாகக் எங்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
ஹோ இதற்கு முன்பு கிளீனிங் மற்றும் கன்சர்வேன்சி நிறுவனமான லியான் செங் காண்ட்ராக்டிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் செயல்பாட்டு மேலாளராக இருந்தார்.
லியான் செங் காண்ட்ராக்டிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் பணிபுரிந்த 56 வெளிநாட்டு ஊழியர்களிடம் இருந்து 2014 ஆம் ஆண்டு முதல் பல சந்தர்ப்பங்களில் ஹோ மொத்தமாக S$396,440 பணம் கேட்டதாக அமைச்சகம் கண்டறிந்துள்ளது.
இந்த பணத்தை அவரே நேரடியாக வசூலித்து வந்துள்ளார். அப்படி இல்லையெனில், மூன்று வெளிநாட்டு தொழிலாளர்கள் மூலம் பணத்தை வசூல் செய்துள்ளார். இந்த மூன்று ஊழியர்களும் தங்களது பணி அனுமதிச் சீட்டை புதுப்பிக்க இவரிடம் பணம் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மொத்தம் 56 வெளிநாட்டு தொழிலாளர்களிடம் இருந்து பணம் வசூலித்ததாகக் கூறப்படும் வெளிநாட்டு மனிதவளச் சட்டத்தின் (EFMA) கீழ் அந்த நபர் மீது 61 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று MOM தெரிவித்துள்ளது.
அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும், S$30,000 வரை அபராதம், இரண்டு ஆண்டுகள் வரை சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
அதுமட்டுமின்றி, வெளிநாட்டு தொழிலாளர்களிடமிருந்து கிக்பேக் வசூலிப்பது கடுமையான குற்றம் என்றும், தவறு செய்யும் நபர்கள் அல்லது நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று MOM எச்சரித்துள்ளது.
வெளிநாட்டு தொழிலாளர்கள் தங்களிடம் இருந்து பணம் வசூலிப்பதாக சந்தேகம் கொண்டால், MOM ஐ 6438 5122 அல்லது 6536 2692 என்ற எண்ணிற்கு அழைக்கலாம் என்று மனிதவளத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.