TamilSaaga

இந்தியாவில் கொரோனா 3வது அலை வருமா? ICMR நடத்திய ஆய்வின் முழு விவரம்

இந்தியாவில் கடந்த 2019 மார்ச் மாதம் துவங்கிய கொரோனா தொற்றுப்பரவல் இன்று வரை தொடர்ந்து வருகிறது. கொரோனா 2வது அலை தற்போது சற்றே குறைந்து நாட்டின் தினசரி கொரோனா பாதிப்பு 50,000 கீழ் வந்துள்ளது.

இந்த சூழலில் கொரோனா 3வது அலை இந்தியாவை தாக்குமா என்ற கேள்விக்கு ICMR நடத்திய ஆய்வில் தகவல்கள் கிடைத்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று 3வது அலை தாக்கும் வாய்ப்புகள் உள்ளது ஆனால் அது கொரோனா 2வது அலை போன்ற அதிக தாக்கத்தை ஏற்படுத்தாது என ICMR தெரிவித்துள்ளது.

கொரோனா அலை தாக்கத்தை கட்டுப்படுத்த போதுமான அளவு முன்னெச்சரிக்கை மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கைகளை இந்தியா எடுக்க வேண்டும். அடுத்த 6 முதல் 8 வாரங்களில் கொரோனாவின் 3வது அலை துவங்க வாய்ப்புள்ளதால் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை அவசியமாகிறது.

கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை சரியாக மேற்கொண்டால் 3வது அலை மட்டுமல்ல அதன் பிறகு எத்தனை அலை வந்தாலும் தாக்கம் பெரிதாக இருக்காது என்றும் ICMR தெரிவித்துள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்பதில் முக்கிய பங்கு வகிப்பது தடுப்பூசி மற்றும் பரிசோதனை. தடுப்பூசியை விரைவாக அதிகப்படியான மக்களுக்கு செலுத்துவதன் மூலம் தாக்கத்தை பெருமளவு குறைக்கலாம். முந்தைய மாதங்களில் பின்தங்கி இருந்த கொரோனா பரிசோதனை தற்போது சற்றே இந்தியாவில் வேகமெடுத்துள்ளது. ஒரு நாளைக்கு ஏறத்தாழ 18 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடைபெறுகிறது. இதுவரை இந்தியாவில் கிட்டத்தட்ட 40 கோடி பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இந்த சூழலில் தற்போது டெல்டா ப்ளஸ் வகையிலான கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவை கவலையில் ஆழ்த்தியுள்ளது. கடந்த வாரம் வரை இந்தியாவில் 49 பேர் இந்த புதிய உருமாறிய வைரசால் பாதிக்கப்பட்டனர். தமிழ்நாடு, கேரளா, உத்திர பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் இந்த டெல்டா வைரஸ் கண்டறியப்பட்டது. முந்தைய கொரோனா வைரசை விட இது வீரியமாகவும் வேகமாகவும் பரவும் தன்மையுடன் இருப்பதால் இதனை கவலைக்குரிய தொற்று வைரஸ் பட்டியலில் மத்திய அரசு சேர்த்துள்ளது.

தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சரியாக துரிதமாக மேற்கொள்ளவில்லை என்றால் அடுத்து வரும் சில வாரங்களில் வைரஸ் தொற்று தாக்கம் அதிகரிக்கும் என்று AIMS இயக்குனர் டாக்டர்.ரன்தீப் குலேரியா அவர்கள் கருத்து தெரிவித்து இருக்கிறார்.

Related posts