தமிழகத்தின் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள லட்சுமாங்குடியில் வசித்து வருபவர் ராஜப்பா. இவரது ஒரே மகன் முத்துக்குமரன். வயது 42. இவருக்கு வித்யா என்ற மனைவியும் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர். ஒருவர் பன்னிரெண்டாம் வகுப்பும் மற்றொருவர் மூன்றாம் வகுப்பும் படித்து வருகிறார்கள்.
கொரோனா காலத்தில் வேலையிழந்து தவித்து வந்த முத்துக்குமரன், கூத்தாநல்லூர் பகுதியில் காய்கறி கடை வைத்து நடத்தி வந்துள்ளார். ஆனால், அதிலும் பெரும் நஷ்டம் ஏற்பட, பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டிய கட்டாயம் காரணமாக வெளிநாட்டில் வேலைக்குச் சென்று வேலை பார்க்கலாம் என்று முடிவு செய்திருக்கிறார்.
இதையடுத்து, ஹைதராபாத்தில் உள்ள ஒரு ஏஜென்சி மூலம், குவைத் செல்வது என்று முடிவானது. இதற்காக அவர் கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் கடன் வாங்கி அந்த ஏஜென்சிக்கு செலுத்தி, கடந்த செப்.3ம் தேதி குவைத் கிளம்பியிருக்கிறார். அங்கு சென்ற பிறகு, தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் இரண்டு முறை தொலைபேசியில் பேசியுள்ளார்.
அப்போது அவர், “கிளீனிங் வேலை என்று சொல்லிவிட்டு பாலைவனத்தில் ஒட்டகம் மேய்க்க விட்டுட்டாங்க” என்று மனைவியிடம் கூறி புலம்பியிருக்கிறார். அதேபோல், சரியான சாப்பாடு இல்லை என்றும், காலையில் எழுந்து இதுவரை தண்ணீர் கூட குடிக்கல என்றும் கூறி வேதனைப்பட்டிருக்கிறார். பிறகு, சம்பந்தப்பட்ட ஏஜென்சியிடம் பேசிய முத்துக்குமரன், ‘என்னை மீண்டும் இந்தியாவுக்கு வர ஏற்பாடு செய்யுங்கள்’ என்று கூறியதற்கு, ஏஜென்சி தரப்பில் ‘குவைத் அரசாங்கத்திடம் இதுபற்றி எடுத்துக் கூறுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதன் பிறகு, குவைத்தில் தான் தங்கியிருக்கும் பகுதியில் வசித்து வந்த பரக்கத் அலி என்பவரிடமும் பேசிய முத்துக்குமரன் தனக்கு ஏற்பட்ட இன்னல்களையும், கொடுமைகளையும் கூறியிருக்கிறார். இந்நிலையில், கடந்த 7ம் தேதி, பரக்கத் அலியிடம் முத்துக்குமரன் பேசிக் கொண்டிருந்த போது, திடீரென அவரது தொலைபேசி அழைப்பு துண்டிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, பரக்கத் அலி பலமுறை முயற்சி செய்து பார்த்தும், முத்துக்குமரனை தொடர்பு கொள்ள முடியவில்லை. அதன் பிறகு, இந்திய ஊழியர் ஒருவர்… அதாவது முத்துக்குமரன் சுட்டுக் கொல்லப்பட்டதாக குவைத் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இதையடுத்து, செப்.9ம் தேதி மாலை முத்துக்குமரன் வீட்டுக்கு தொலைபேசி மூலம் பேசிய ஹைதராபாத் ஏஜென்சி, இந்த இறப்பு தகவலை தெரிவித்திருக்கிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அவரது பெற்றோர் புகார் மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில், தங்களது மகன் மரணம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும், தவறு செய்தவர்களை குவைத் அரசு தண்டிக்க வேண்டும் என்றும், மகன் முத்துக்குமரன் உடலை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
குடும்ப வறுமைக்காக குவைத் சென்ற ஊழியர், சுட்டுக் கொல்லப்பட்டிருக்கும் சம்பவம், சக தமிழக ஊழியர்கள் இடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.