தஞ்சை மாவட்டத்தில் முதலில் ஆரம்பிக்கப்பட்ட மொய் விருந்து கலாசாரம் மெல்ல மெல்ல பரவி சென்ற வருடம் புதுக்கோட்டையில் ஊரே பேசும் அளவுக்கு பிரம்மாணமாக நடந்து முடிந்தது. ஆனால் இந்த வருடம் மொய்விருந்து விழாவுக்கு மொத்தமாக அந்த மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார்.
ஆடி மொய்விருந்து கலாசாரம் பற்றி தெரியாத சென்னை வாசிகளுக்கு இதோ அதுக்குறித்த தகவல்கள்.
பொருளாதாரத்தில் பின் தங்கி, சிரமப்படுவார்களுக்கு உதவுவதற்காகவே, தொடங்கப்பட்டது மொய் விருந்து. மொய் விருந்து திருவிழாவில் கலந்துகொள்பவர்களுக்கு கம கம கறி விருந்து நிச்சயம்.
மொய் விருந்து திருவிழா, கோவில் திருவிழாவை விட மிகவும் பிரசித்தி பெற்றதாகும். சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சாவூர் மாவட்டத்தின் சில பகுதிகளில் தொடங்கப்பட்ட இந்த மொய் விருந்து விழாவில் கோடிக்கணக்கான ரூபாய் பணம் மொய்யாக வசூலிக்கப்படும்.
தனிநபரோ அல்லது பத்து நபர்கள் சேர்ந்தோ, ஒரே பந்தலில் மொய் விருந்து விழாவை நடத்துவார்கள். விழாவில் ஆட்டுக்கறி சமையல் செய்து, மொய் விருந்துக்கு வருபவர்களுக்கு பரிமாறப்படும். இதனை தொடர்ந்து உணவு அருந்தியவர்கள், தங்கள் பெயரில் மொய் எழுதி செல்வர்.
ஒருவர் இந்த ஆண்டு மொய் விருந்து நடத்தினால், அதன் பிறகு நான்காண்டுகளுக்கு விழா நடத்தக்கூடாது. அப்போது தனக்கு மொய் செய்தவர்களுக்கு, மீண்டும் மொய் அளிக்க வேண்டும். இவ்வாறு நான்காண்டுகள் மொய் செய்த பின், மீண்டும் ஐந்தாவது ஆண்டு அவர் மொய்விருந்து நடத்துவார்.
இவ்வாறு செய்யப்படும் மொய் 5 ஆண்டுகளுக்கு பிறகு, மொய் விருந்து நடத்தும்போது இருமடங்காக கிடைக்கின்றது. இதனை வைத்து விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் தங்களது தொழிலை உயர்த்திக் கொள்வார்கள். ஆனால் இன்று வணிகமயமாகி கோடிகள் புரளும் திருவிழாவாக உருவெடுத்துவிட்டது என்பது அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிசர்னம்.