TamilSaaga

“ஆண்கள்” எனும் பாவப்பட்ட ஜென்மம்.. குடும்ப பாரத்தை சுமப்பதைத் தவிர வேறு என்ன கண்டது இந்த கூட்டம்?

ஆண்கள்..

பொதி சுமப்பதற்காகவே படைக்கப்பட்ட , மிகச் சில இனங்களில், உயர்ந்த இடத்தில் இருக்கும் ஒரே இனம்.

தான் யார்!? தன் இயல்பு என்ன!? என்பதையே முற்றிலும் மறந்து, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, இதுதான் ஆண்கள்! இப்படித்தான் இருக்க வேண்டும் ஆண்கள் ! எனும் போலியான வரையறைகளை நம்பிக்கொண்டு, இது கூட செய்ய முடியாமல் ஒரு ஆணா? ஒரு ஆண் இதெல்லாம் செய்யலாமா? என்னும் இரு எல்லைகளுக்குள் மட்டுமே வாழ தன்னையே பழக்கிக் கொண்ட அப்பாவிகளின் கூட்டம் அது..!!

பெண்களை அடிமைப்படுத்துகிற, இயற்கை இயல்பாகவே வழங்கியிருக்கும் கொடைகளைக் கூட, பெண்களுக்கு எதிராகவும், தன்னைவிட வலிமை குறைவானவர்களுக்கு எதிராகவும் பயன்படுத்தும் கொடியவர்கள்.

உலகின் பல்வேறு தவறுகளுக்கும் கொடுமைகளுக்கும் காரணம் ஆண்கள் தான்.. என்பது போன்ற எல்லாரும் சொல்லும் அந்த எதிர்மறை மதிப்பீடுகளில் எனக்கு நம்பிக்கை இல்லை. அப்படியானால் பெண்கள் படும் துன்பங்கள், சமூகத்தில் தினம் தினம் நடந்து கொண்டிருப்பவை எல்லாம் உங்கள் கண்களில் படவில்லையா? ஆண்கள் எல்லாம் அவ்வளவு நல்லவர்களா? அப்படி நல்லவர்களாக இருந்தால் ஏன் இவ்வளவு தீமைகள் நடக்கிறது? என்றெல்லாம் நீங்கள் வாதம் புரியத் தொடங்கினால், என்னுடைய பதில் இதுதான் –

சமூகம் இதுவரை ஆண் இனத்தின் பெயரால் சந்தித்திருக்கும் எல்லா எதிர்மறை அனுபவங்களுக்கும் காரணம், அது உள்வாங்கி இருக்கிற, அல்லது அதற்குள் புகுத்தப்பட்டு இருக்கிற ஆணாதிக்கச் சிந்தனைகள் தானே தவிர ஆண்கள் இல்லை! ஆண்கள் வேறு ஆணாதிக்க சிந்தனைகள் வேறா? என்று நீங்கள் என்னைக் கேட்டால் என்னுடைய பதில் இதுதான்- பெரும்பாலான ஆண்களுக்கும், ஆணாதிக்க சிந்தனைகளுக்கும் எந்தத் தொடர்புமில்லை!!! ஆணாதிக்க சிந்தனைகளை உள்வாங்கி இருக்கும் பெண்களும் உண்டு!!! அவர்களால் உண்டாகும் அழிவுகளும், காயங்களும் கூட கணக்கிலடங்காதவை தான்…!!! அதனால்தான் சொல்கிறேன், சரியாக புரிந்து கொள்ளப்படாத சரியாக திசை காட்டப்படாத ஆண்கள் மீது, ஆண் இனத்தின் மீது பரிதாபப்படுகிறேன்.

பெண்களுக்காக குரல் கொடுக்கும் பலர் ஆண்களை கணக்கிலேயே எடுத்துக்கொள்வதில்லை. ஆண்களுக்காக கொடி பிடிக்கும் சிலரோ, உண்மையிலேயே தங்களுக்கு என்ன தேவை!? என்பதைப் பற்றி சிந்திப்பதே இல்லை. உலகெங்கும் நடைபெறும் கொடும் குற்றச்செயல்களில் கைதாகும் குற்றவாளிகளில் ஏறக்குறைய 75 சதவிகிதம் பேர் ஆண்கள் தான்! பெண்கள் இல்லை!

கொடிய குற்றங்களைக் கூட துணிந்து செய்கிற, மனித நேயத்தைப் பற்றி கவலைப்படாத அசட்டுத் துணிச்சலை அவர்களுக்குக் கொடுப்பது எது?! ஆண் என்றால் அப்படித்தான்! ஆண்கள் தான் இப்படி எல்லாம் செய்வார்கள்! ஒரு ஆண் இப்படி செய்வது ஒன்றும் பெரிய காரியமில்லை! என ஆண்டாண்டு காலமாக செலுத்தப்பட்டு இருக்கும் ஆணாதிக்க போதையின் மயக்கத்தில், மனிதத் தன்மையே குறைந்து போன அவர்கள் மீது, ஆத்திரத்திற்கு மேலாக பரிதாபம் தான் தோன்றுகிறது!!!

ஒரு ஆண் ஒவ்வொரு நாளும் குறைந்தது ஆறு முறைகள் பொய் சொல்கிறானாம். இது பெண்களைப் பொறுத்தவரை மூன்று தான் . அதாவது பெண்களை விட ஆண்கள் ஒவ்வொரு நாளும் இரண்டு மடங்கு அதிகமாக பொய் சொல்கிறார்களாம், ஆய்வு முடிவுகள் சொல்கின்றன.

அடக்கொடுமையே !
இந்த ஆண்கள் தான் எவ்வளவு பொய்யர்கள்!?
ஏன்!? உள்ளது உள்ளபடி உண்மையைச் சொல்லிவிட்டால் என்ன !?
எல்லாம் ஆம்பளைத் திமிர் !
என்று தீர்ப்பிடத்தான் இயல்பாக வருகிறது முதலில்.
ஆனால்
ஒரு ஆண் இப்படி சொல்லலாமா!?
ஒரு ஆணாக இருந்து கொண்டு இதையெல்லாமா சொல்வது !? உண்மையைச் சொல்லிவிட்டால் என்னை எப்படி எண்ணிக் கொள்வார்களோ!? என்ற அழுத்தம் பெண்களைவிட இருமடங்கு இருப்பதால்தானே, இருமடங்கு பொய் சொல்லவும் தூண்டப்படுகிறார்கள் என்று – அவர்கள் மீது பரிதாபப்படுகிறேன்.

பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படுதல், பாலியல் தொந்தரவுகள், உடல்ரீதியான வன்முறைகள், என்று சொன்ன உடனேயே எல்லார் நினைவிலும் வருவது – அரக்க குணம் கொண்ட ஆண்களும் ! வழுவில்லாத பெண்களும் தான்!? எங்கும் இதே பேச்சு! உண்மைதான்! ஒத்துக்கொள்கிறேன்!

பெண்களைக் காக்க, உடல் ரீதியாக, பாலியல் ரீதியாக அவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் போது அவர்களை பாதுகாத்துக்கொள்ள, அவர்களோடு உடன் நிற்க, தேவையான உதவிகளைச் செய்ய, அவர்களுக்கான நீதியைப் பெற்றுத்தர, எத்தனை எத்தனை குரல்கள்!? ஒரு பெண்ணாக, பெருமையாகவே உணர்கிறேன். (அதே சமயம் பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளோடு ஒப்பிடும்போது, அவை எல்லாம் மலைக்கும் மடுவுக்குமான இடைவெளி கொண்டிருப்பவை என்பதையும், பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளோடு ஒப்பிடும் போது, இவை எல்லாம் ஒன்றுமே இல்லை என்பதையும், இந்த இடத்தில் வருத்தத்தோடு நினைவு கூறுகிறேன்)

ஆனால் அதேசமயம் இதுபோன்ற எல்லாக் கொடுமைகளும்,ஆண்களுக்கும் நடக்கிறது என்று சொன்னால் நம்மில் பல பேர் அதை நம்பக் கூட மாட்டார்கள். அதிலும் குறிப்பாக இந்திய ஆண் குழந்தைகளும், ஆண்களும் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாவது குறித்த சிந்தனை கூட இங்கே பலருக்கு இல்லை.

ஒரே ஒரு உதாரணம் இங்கே தர விரும்புகிறேன். 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம், மும்பையை மையமாகக் கொண்ட பேராசிரியர் ஒருவர்,இந்தியாவில் ஆண்கள் எதிர்கொள்ளும் பாலியல் தொந்தரவுகளை பற்றி மேற்கொண்ட ஒரு ஆய்வின் சில கூறுகள் உண்மையிலேயே அதிர்ச்சி தரக் கூடியதாகவே அமைந்திருந்தது.

வேறுபட்ட வயது தொழில் சார்ந்தோரிடம் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், பலர் வெளிப்படையாக ஆண்கள் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாவது என்பது நடக்கவே முடியாத நடைமுறையில் இல்லாத ஒன்று என்று குறிப்பிடுகிறார்கள். ஆண்கள் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாவது பொதுவாக வழக்கத்தில் இருக்கக்கூடிய ஒன்றா? இல்லையா? என்ற கேள்விக்கு 54% பேர் இல்லை என்றே பதில் கொடுக்கின்றனர்.

இன்னும் கொடுமையான பதிவாக, ஒரு சிறு தவறு செய்த 7 வயது மாணவனை, அவன் ஆசிரியர் நிர்வாணமாக பள்ளி முழுவதும் நடக்க வைத்தார். இது வெறும் தண்டனையா? அல்லது பாலியல் துன்புறுத்தலா? என்ற கேள்விக்கு கூட, அது வெறும் தண்டனை தான் என்று பதிலளித்த நபர்களும் கணிசமாக இருந்தனர்.

இப்படி அடுத்தவர்களை துன்புறுத்தக் கூடிய இனம் தான் இது ! என்று பழக்கப்படுத்தப் பட்டு விட்டதால், அவர்களுக்கும் துன்புறுவார்கள்.அவர்களுக்கும் துன்பங்களும், வலி,வேதனைகளும் உண்டு என்பதை எண்ணிப் பார்க்கவும் மறந்து போன ஒரு சமூகத்தின் ஒரு சூழலில் இருக்கும் ஆண்கள் மீது பரிதாபப்படுகிறேன்!

அதற்காக ஆண்கள் எல்லோருமே நல்லவர்கள்! அவர்கள் செய்யும் எல்லா கெட்ட செயல்களுக்கு பின்னாலும் ஒரு காரணம் இருக்கிறது! என்று கொடி பிடிப்பதல்ல என் நோக்கம்! என்னதான் ஆணாதிக்க சிந்தனைகளை உள்வாங்கி இருந்தாலும், பச்சிளம் குழந்தை என்றும் பாராமல் காம இச்சைக்காக அவர்களை சிதைக்கும் கீழ் பிறவிகள்- ஆட்சி அதிகாரத்தை கையில் கொண்டு, அன்றாடம் காய்ச்சிகளை அழிக்கக் கிளம்பும் ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள்- உடன் பணிபுரியும் பயணிக்கும் பெண்களின், இயலாமை மற்றும் அவர்களின் பலவீனங்களை பயன்படுத்திக் கொள்ளத் துடிக்கும் நயவஞ்சகத்தனம் கொண்ட சந்தர்ப்பவாதிகள்-

என அறிந்தே அடுத்தவர் வாழ்வை கெடுக்கும் அத்தனை ஆண்களையும் நானும் வெறுக்கிறேன்.

அதேசமயம் மனைவி பிள்ளைகளுக்காக தான் விரும்பும்,தனக்கான எல்லாவற்றையும் ஒதுக்கி வைக்கக் கூடிய அண்ணன்மார்கள். வயது சிறிதே ஆனாலும் பெற்றோர் ,உடன் பிறந்தோர் தேவைகள் நலன்களை முன்னிலைப்படுத்தி, தன்னை தனக்குள்ளேயே மறைத்துக் கொள்ளும் பக்குவம் நிறைந்த தம்பிமார்கள் பிள்ளைகளின் வளர்ச்சி, மனைவியின் நலம் பற்றி மட்டுமே சதா சிந்திக்கும் தந்தைமார்கள். இணையற்ற துணையோடு,தான் தானாகவே வாழ இயலாத தன்மான இழப்பினையும் தாங்கிக்கொண்டு, குடும்ப சூழலை காத்துக்கொள்ள போராடும் நண்பர்கள்!

தன்னால் பங்களிப்பு எதுவும் செய்ய இயலவில்லை என்றாலும், தொந்தரவு தராமல் ஒதுங்கிக் கொள்ள வேண்டும் என, சத்தம் இன்றி வாழ கற்றுக் கொண்ட வயதான ஆண்கள். தன்னை சுமை தாங்கியாக கருதிக் கொண்டிருக்கும் உறவுகளுக்காக, தன்னுடைய சுமைகளை, வலிகளை தனக்குள்ளேயே புதைத்துக் கொள்ளத் தெரிந்த சகோதரர்கள். என என்னைச் சுற்றி- தன்னைச்சுற்றி வரைந்து கொண்ட- வரையப்பட்ட- வளையங்களோடு- வாழ பழகிக் கொண்ட- எல்லா ஆண்களையும்- மதிக்கிறேன்-

இன்னும் ஒருபடி மேலாக- அவர்களுக்காக பரிதாபப்படுகிறேன்.

தோழி ஆரா அருணா

Related posts