சிங்கப்பூரில் கடந்த 2019ம் ஆண்டு வெளியான தரவுகளின் அடிப்படையில் சிங்கப்பூரில் 1 லட்சம் மக்களில் 2.73 நபர்கள் சாலை விபத்தில் சிக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகின் பல நாடுகளை ஒப்பிடுகையில் சிங்கப்பூர் சாலை விபத்துகளை மிகவும் தீவிரமாக கவனித்து வருகின்றது.
இந்நிலையில் சிங்கப்பூர் வரலாற்றில் 70க்கும் அதிகமான உயிர்களை பலி வாங்கிய ஒரு நிகழ்வை குறித்து தான் இந்த பதிவில் பார்க்கவுள்ளோம். 12 அக்டோபர் 1978ம் ஆண்டு நடந்தது தான் The Spyros Disaster என்ற அந்த கோரமான சம்பவம்.
ஸ்பைரோஸ் கப்பல்
12 அக்டோபர் 1978, சிங்கப்பூர் வரலாற்றில் ஒரு கருப்பு நாள் என்றே கூறலாம். ‘ஸ்பைரோஸ்’ லைபீரியாவின் யுலிஸஸ் டேங்கர் கார்ப்பரேஷனுக்கு சொந்தமான டேங்கர் கப்பல். இந்த கப்பல் 1964 ஆம் ஆண்டில் ஜப்பானின் மிட்சுபிஷி ஹெவி இண்டஸ்ட்ரீஸால் கட்டப்பட்டது. சுமார் 64,081 டன் எடை கொண்ட இந்த கப்பல் நீராவி விசையாழி மூலம் இயக்கப்படும் டேங்கர் ஆகும்.
12 அக்டோபர் 1978
அக்டோபர் 6, 1978ல், ஸ்பைரோஸ் சிங்கப்பூருக்கு ஜுராங் கப்பல் நிலையத்திற்கு பொது பழுதுபார்ப்புக்காக வந்தது. பழுதுபார்க்கும் பணிகள் தொடர்ந்து பல நாட்களாக நடந்து வந்த நிலையில் 12 அக்டோபர் 1978ம் ஆண்டு மதியம் 2:15 மணியளவில், ஸ்பைரோஸ் கப்பலில் ஏற்பட்ட ஒரு கோளாறால் அந்த கப்பல் வெடித்தது.
பழுது மற்றும் துப்புரவு பணிகளுக்காக மதிய உணவு இடைவேளைக்கு பின்னர் சுமார் 150 தொழிலாளர்கள் கப்பலின் இயந்திரம் மற்றும் கொதிகலன் அறைகளுக்கு திரும்பிய நிலையில் இந்த வெடிப்பு ஏற்பட்டது. பயங்கர சத்தத்துடன் வெடித்த அந்த கப்பலின் பாகங்கள் 100 மீட்ருக்கும் மேல் வெடித்துசிதறின. இந்த விபத்தில் 70 ஆண்கள் மற்றும் 6 பெண்கள் பலியானார்கள். ஆண்டுகள் கடந்துவிட்டபோதும் இன்றளவும் இந்த சம்பவம் மறக்கமுடியாத வடுவாக உள்ளது.