TamilSaaga

சிங்கப்பூரர்களின் Insecurity அச்சம் – வெளிநாட்டு ஊழியர்கள் தலையில் இறங்கும் புது இடி!

கொரோனா வைரஸ்… பணக்காரர்கள் தவிர்த்து உலகம் முழுவதும் உள்ள ஏழைகள், மிடில் கிளாஸ் மக்கள் வெறுக்கும் ஒரு வார்த்தை. உயிர் என்பதைத் தாண்டி, வாழ்வாதாரத்தை இது காலி செய்து கொண்டிருக்கிறது.

உயிர் போவது என்பது ஒரு நொடி கூத்து தான். இறந்தபிறகு என்ன நடந்தாலும் நமக்கு தெரியப் போவது இல்லை. ஆனால், உயிருடன் இருக்கும் போதே நம்மை நடை பிணமாக வைத்திருக்கிறது இந்த வைரஸ்.

வேலையிழந்து வீட்டில் சும்மா இருந்தாலே நடைபிணம் தானே. அதைத் தான் இந்த கொரோனா எனும் கொடூரன் நமக்கு பரிசளித்துக் கொண்டிருக்கிறது.

குறிப்பாக, வெளிநாட்டு தொழிலாளர்களின் நிலை சொல்லி மாளாது. வெளிநாட்டில் வேலைக்கு செல்வோரில் கடன் வாங்கி செல்வோர் எண்ணிக்கை 99 சதவிகிதம். அப்படி கடன் வாங்கிச் சென்று, கொரோனா காரணமாக வேலையிழந்து சொந்த ஊர் திரும்பி இன்று அவரவர் ஊர்களில் வருமானமே இல்லாமல் வட்டியைக் கட்டிக் கொண்டு வாழ்கிறார்கள். குறிப்பாக, தமிழர்களை என்றுமே வாரி அணைத்துக் கொள்ளும் சிங்கப்பூருக்கு பல கனவுகளுடன் வேலைக்குச் சென்றவர்களின் இன்றைய நிலை மிகவும் மோசம்.

அப்படிச் சென்று கொரோனா காரணமாக வேலையிழந்து சொந்த ஊர்களுக்கு திரும்பிய அவர்கள் அனைவரின் ஒரே கேள்வி, “எப்போது சிங்கப்பூர் வாசல் திறக்கப்படும்?” என்பதே.

ஆனால், உண்மையில் சிங்கப்பூரில் தற்போதைய நிலை என்ன என்று ஆராய்வதை விட, கொரோனாவை தாண்டி வெளிநாட்டு ஊழியர்களை அச்சுறுத்தும் விஷயம் என்பது, சிங்கப்பூரர்கள்… அதாவது சிங்கப்பூரை பூர்வீகமாகக் கொண்டவர்கள் தங்களின் வேலைவாய்ப்புகள் குறித்து அச்சம் தெரிவித்திருப்பது தான். ஆம்! சிங்கப்பூரில் உள்ள, ‘கொள்கை ஆய்வு மையம்’ சர்வே ஒன்றை எடுத்திருக்கிறது. சிங்கப்பூரர்களிடம் மட்டும் இந்த ஆய்வு எடுக்கப்பட்டது.

இதில் பங்கேற்ற சிங்கப்பூரர்களில் 10-ல் 3 பேர் தங்களின் வேலை பறிபோகக்கூடும் என்றும், புது வேலை கிடைக்காமல் போகக்கூடும் என்றும் ரொம்பவே கவலைப்படுவதாக கூறியிருக்கின்றனர். அதுமட்டுமின்றி, தற்போது வேலை இல்லாதவர்களும், படித்துக் கொண்டிருப்பவர்களும் மற்ற அனைத்துப் பிரிவினரைக் காட்டிலும் வேலை குறித்த அதிக பயத்துடன் இருப்பதாக கூறியுள்ளனர்.

அதுபோல், சிங்கப்பூரில் இளைய சமூகத்தினரும் தங்களது அச்சத்தை வெளிப்படுத்தி உள்ளனர். அதாவது, 21 முதல் 35 வயதுக்குட்பட்டவர்களில், 33.32 சதவிகிதத்தினர், வேலைவாய்ப்பு குறித்து தாங்கள் மிகுந்த அச்சத்தில் இருப்பதாக கூறியுள்ளனர். இது எங்கே போய் முடியும் தெரியுமா? வெளிநாட்டு ஊழியர்களின் தலையில் தான் விடியும். சிங்கப்பூரர்கள் இந்தளவுக்கு தங்களது Insecurity-யை வெளிப்படுத்தி இருப்பதால், இனி வரும் காலங்களில் வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு பணியமர்த்துவதில் மேலும் சில கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்படலாம்.

ஏற்கனவே, வெளிநாட்டைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படும் வேலைவாய்ப்பு பாஸ் (S-பாஸ் உள்ளிட்டவை) வழங்கும் நடைமுறை கடினமாக்கப்பட்டு உள்ளது. இதற்கு முன்பு இருந்தது போல் இல்லாமல், வெளிநாட்டு ஊழியர்கள் சிங்கப்பூரில் பணிபுரிய, சம்பந்தப்பட்ட நிறுவனம் ஸ்பான்சர் விசா கொடுக்க வேண்டும் என்ற புதிய விதியை சிங்கப்பூர் அரசு ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சூழலில் ஆய்வின் முடிவு, கொரோனா பரவல் குறைந்த பிறகு, சிங்கப்பூர் செல்லலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு மேலும் வேதனையை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

Related posts