சிராங்கூன் சாலையில் உள்ள ஒரு நகைக் கடையில் $12,000 மதிப்புள்ள தங்கக்காப்பு ஒன்றை திருடியதாக 26 வயது ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.35 மணியளவில் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. புகாரின் அடிப்படையில் விரைந்து செயல்பட்ட காவல்துறையினர், 24 மணி நேரத்திற்குள் அந்த ஆடவரை கண்டுபிடித்து கைது செய்தனர்.
விசாரணையில், தங்கக்காப்பு வாங்குவது போல் நடித்த அந்த ஆடவர், அதனை தனது கையில் அணிந்து பார்த்துள்ளார். பின்னர், கடை ஊழியர் மற்றொரு வாடிக்கையாளருக்கு சேவை செய்து கொண்டிருந்தபோது, அவர் அங்கிருந்து அந்த நகையுடன் நழுவிச் சென்றுள்ளார். காவல்துறையினர் அவரிடமிருந்து $4,900 ரொக்கம், கைப்பேசி மற்றும் மடிக்கணினி ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.
பீச் ரோட்டில் திருமண அன்பளிப்புப் பணம் திருடிய 36 வயது ஆடவர் சிக்கினார்
மற்றொரு சம்பவத்தில், பீச் ரோட்டில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அன்பளிப்புத் தொகைகளைத் திருடிய குற்றத்திற்காக 36 வயது ஆடவர் ஒருவர் கடந்த திங்கட்கிழமை கைது செய்யப்பட்டார். சிவப்பு நிற உறைகள் நிறைந்த இரண்டு பெட்டிகளை அவர் திருடியதாகவும், அந்தப் பெட்டிகளில் சுமார் $50,000 இருந்திருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து கடந்த சனிக்கிழமை பிற்பகல் 12.49 மணியளவில் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. காவல்துறையினர் அந்த ஆடவரிடமிருந்து $3,000 ரொக்கத்தை மீட்டனர். விசாரணையில், அந்த ஆடவர் திருடும் நோக்கத்துடன் சம்பவ இடத்திற்குச் சென்றதும், திருடிய பின்னர் தனது உடைகளை மாற்றிக் கொண்டதும் தெரிய வந்துள்ளது.
இந்த இரண்டு திருட்டு சம்பவங்கள் தொடர்பாகவும் கைது செய்யப்பட்ட ஆடவர்கள் மீது நீதிமன்றத்தில் விரைவில் குற்றம் சுமத்தப்பட உள்ளது என்று காவல்துறை தெரிவித்துள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஏழாண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.