சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணமாக இருந்தது.. இருப்பது.. இருக்கப் போவது வெளிநாட்டுத் தொழிலாளர்களின் கடுமையான உழைப்பு தான்.
ஆனால், தற்போது சிங்கப்பூரில் வெளிநாட்டு தொழிலாளர்களை முன்வைத்து எழுந்துள்ள அரசியல் பிரச்சனைகள், சர்வதேச அளவில் கவனம் ஈர்த்துள்ளது. அது மட்டுமின்றி, இந்த பிரச்சனை பாடுபட்டு உழைக்கும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு மிகப்பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
அப்படி என்ன தான் பிரச்சனை? அதனை பார்ப்பதற்கு முன்பு, இந்த பிரச்சனையின் மூலக்காரணம் எது என்பது பார்ப்போம். சிங்கப்பூரில் இருக்கும் “கொள்கை ஆய்வு மையம்’ சமீபத்தில் ஒரு ஆய்வு முடிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த ஆய்வில் இருந்து தான் சிக்கலே தொடங்கியது. அதாவது, சிங்கப்பூரின் பூர்வகுடிகள் 70 சதவிகிதம் பேர், வெளிநாட்டு தொழிலாளர்களால் தனது வாழ்வாதாரம், எதிர்காலம் கேள்விக்குறியாகிறது என்றும், இதனால், எதிர்காலத்தில் வெளிநாட்டு தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதில் கடும் கட்டுப்பாடுகள் கொண்டு வர வேண்டும் என்று கோரியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில், 43.6 சதவிகித பூர்வகுடிகள், வெளிநாட்டில் இருந்து சிங்கப்பூர் வந்து வேலை செய்யும் தொழிலாளர்களால், இங்கு வேலையின்மை அதிகரிக்கிறது என்று கூறியிருக்கின்றனர். இதனால் ‘வேலைவாய்ப்பு’ தொடர்பான பயம் எழுவதாகவும், வெளிநாட்டு தொழிலாளர்களால் தங்கள் சந்ததிகளின் எதிர்காலமும் மிகப்பெரும் கேள்விக்குறிக்கு ஆளாவதாக சிங்கப்பூர் பூர்வகுடிகள் மற்றும் நிரந்தர குடியுரிமை பெற்றவர்கள் வேதனை தெரிவித்துள்ளதாக ஆந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வளவு தாங்க.. இந்த ஆய்வு வெளியானதில் இருந்து சிங்கப்பூரில் அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியிருக்கிறது. விவாதங்கள் அரங்கேறி வருகின்றன. இந்த விவகாரத்தில் எதிர்வரும் நாட்களில் பல்வேறு அழுத்தங்ளை சிங்கப்பூர் அரசு எதிர்கொள்ள வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
எனினும், இந்த விவாகரத்துக்கு பதில் அளிக்கும் விதமாக, அமைச்சர்கள் சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் அறிக்கைகளை சமர்ப்பித்தனர். அதில், “சிங்கப்பூரில் பொருளாதாரம் மென்மேலும் வளர நடவடிக்கை எடுக்கப்படும். சர்வதேச அளவில் வேலைவாய்ப்புகளை ஊக்குவிக்கும் அரசாங்கத்தின் சமநிலை நடவடிக்கை பாதுகாக்கப்படும்” என்று குறிப்பிடப்பட்டது. இது வெளிநாட்டு ஊழியர்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் அமைந்தது. ஏனெனில், இந்த ஆய்வு வெளியானது பல வெளிநாட்டு ஊழியர்களுக்கே தெரியாது. தெரிந்தவர்கள் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு இருந்தனர். எத்தனை லட்சம் கடன் வாங்கி வந்திருப்பார்கள்! பக்கென்று இருக்காதா பின்ன!.
சமீபத்தில் பேசிய சிங்கப்பூர் சுகாதார அமைச்சர் ஓங் யே குங், “சிங்கப்பூர் முன்னேறுவதற்கு வெற்றிப் பெறுவதற்கு காரணமாக இருந்தவர்களை (வெளிநாட்டு தொழிலாளர்கள்) நாம் கவனக்குறைவாக கையாள முடியாது. சர்வதேச அளவிலான தொடர்பும் உதவியும் இல்லாமல், சர்வதேச மக்களை வரவேற்காமல் நம்மால் சர்வைவ் செய்ய முடியாது என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்” என்று பேசியிருந்தார்.
அமைச்சரின் கருத்தை அப்படியே பிரதிபலித்த சிங்கப்பூரின் மத்திய வங்கித் தலைவரும், சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் நிர்வாக இயக்குநருமான ரவி மேனன், “சிங்கப்பூரில் தொழிலாளர்களுக்கான பற்றாக்குறை இருக்கிறது. இதை நாம் மறுக்க முடியாது. எனவே தான், வெளிநாட்டு ஊழியர்களை நோக்கி நாம் செல்ல வேண்டியிருக்கிறது. நல்ல தகுதி வாய்ந்த ஊழியர்களை சார்ந்து இருக்க வேண்டியுள்ளது. அவர்கள் நம்ப வேண்டியுள்ளது. இங்கு வந்து பணிபுரியும் பல வெளிநாட்டு ஊழியர்கள் மிகவும் திறமை வாய்ந்தவர்களாக இருக்கின்றனர். எந்த பணியாக இருந்தாலும், ஆர்வமுடன் செய்கின்றனர். கண்ணியமானவர்களாகவும் உள்ளனர். இதையும் நாம் ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும். இதனை பல சந்தர்ப்பங்களில் அவர்கள் நிரூபித்துள்ளனர். திறமைசாலிகள், உழைப்பாளிகள். இரவு தாமதமானாலும் பணியை முடித்துவிட்டு செல்லும் அளவுக்கு பொறுப்பு உள்ளவர்கள்” என்று கூறியுள்ளார்.
சிங்கப்பூர் அரசு இந்த விவகாரத்தை மிகவும் பொறுப்புடனும், கவனத்துடனும் கையாண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சில முக்கியமான நடவடிக்கைளை சிங்கப்பூர் அரசு எடுத்து வருகிறது. அதாவது, சிங்கப்பூரில் எந்த ஒரு பணியாக இருந்தாலும், எந்தவொரு சிங்கப்பூர் குடிமக்களும் அந்த வேலைக்கு தேர்வாக பட்சத்தில் தான், அந்த பணி வாய்ப்பு வெளிநாட்டவருக்கு வழங்கப்படும். இது நமது அரசின் விதி. இப்போது, நிறுவனங்கள் இந்த விதிகளை மீறி, வெளிநாட்டு தொழிலாளர்களை தேர்வு செய்கிறதா என்று அரசு கண்காணிக்கத் தொடங்கியுள்ளது. அப்படி தவறுகள் செய்திருந்தால், குறிப்பிட்ட நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் அரசு தயாராக உள்ளது.
இதனால், சிங்கப்பூரில் வெளிநாட்டு தொழிலாளர்கள் மீதான கிடுக்கிப்பிடி அதிகரிக்கத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த பொதுத் தேர்தலில், தொழிலாளர்கள் கட்சி 93 நாடாளுமன்ற தொகுதிகளில் 10ல் வென்று ஆதிக்கம் செலுத்தியது. இதற்கு முக்கிய காரணம், அந்த கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கைகள் தான். அதில் பிரதான அறிக்கை, “வெளிநாட்டு ஊழியர்களின் வேலைவாய்ப்பை கடினமாக்குவது, பூர்வக்குடி மக்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்களுக்கு ஊக்கத் தொகை வழங்குவது” உள்ளிட்ட வேலைவாய்ப்பு தொடர்பான அறிக்கைகள் தேர்தல் நேரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.
இப்போது ஆய்வு வெளியான பிறகு வெளிநாட்டு தொழிலாளர்கள் குறித்த சலசலப்பு மீண்டும் எழுந்துள்ள நிலையில், சிங்கப்பூருக்கு புலம் பெயர்ந்தோர் மற்றும் அவர்களின் வேலைவாய்ப்பு குறித்து எதிர்க்கட்சி தரப்பில் தனியே ஆய்வுகள் தொடங்கியுள்ளன. ஏற்கனேவே கொரோனா காரணமாக வேலைவாய்ப்பின்றி வெளிநாட்டு தொழிலாளர்கள் அல்லல்பட்டுக் கொண்டிருக்க, போதாத குறைக்கு இப்படியொரு சிக்கலும், சர்ச்சைகளும் அவர்களது வேலைவாய்ப்புகளை மேலும் கேள்விக்குறியாக்கி உள்ளன.