சிங்கப்பூரில் ஒரு பெண், காலை உணவுக்காக Waffle ஆடர் செய்த நிலையில் அவருக்கு கூடுதலாக ஒன்று அந்த உணவு பொட்டலத்தில் கிடைத்தது அவரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. கடந்த மார்ச் 3 அன்று Hillview பகுதியில் உள்ள Flash Coffee Outletல் இருந்து டெலிவரி மூலம் ஒரு காபி மற்றும் Waffleஐ ஆர்டர் செய்ததாக ஆலிஸ் என்ற அந்த பெண் மதர்ஷிப்பிடம் கூறினார். நல்ல பசியில் இருந்த நேரத்தில் அந்த Waffleன் மூன்றில் ஒரு பங்கை உண்ட பிறகு தான் அதன் அடியில் ஒரு பல்லி கிடப்பதை பார்த்து திடுக்கிட்டுள்ளார்.
அந்த பல்லியை கண்டதும் எனக்கு ஒரு நிமிடம் உயிரே நின்றுவிட்டது என்று கூறிய அலிஸ், அந்த பல்லி உயிருடன் உள்ளதா? என்பதை அறிய அந்த Waffle பையை குலுக்கியுள்ளார். ஆனால் அது அசையாதலால் அது இறந்ததை அவர் உறுதி செய்துள்ளார். டெலிவரி செய்யப்பட்ட பிறகு அந்தப் பொட்டலத்தில் பல்லி ஊர்ந்து செல்வது சாத்தியமில்லை என்றும், அதை உடனடியாகத் தன் மேசையில் வைத்துவிட்டு நகர்ந்ததாகவும் அலிஸ் கூறினார்.
இந்த சம்பவத்தை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரிகளில் ஆவணப்படுத்தி, ஆலிஸ் அந்த உணவை அளித்த Flash Coffee கடையையும் டேக் செய்திருந்தார். மேலும் அவரது அந்த இன்ஸ்டாகிராம் பதிவில், அவர் ஃப்ளாஷ் காபி “தனக்கு இதற்கான பணத்தை திருப்பி தருவது மட்டும் போதாது,” “ஆண்டு முழுவதும் இலவச காபி மற்றும் வாஃபிள்ஸ் ஸ்பான்சர் செய்யுமாறு கேட்டுக் கொண்டார். உடனே Flash Coffee நிறுவனமும் இந்த சம்பவத்தைப் பற்றி கேட்டறிய அவரை தொடர்புகொண்டது.
இறுதியில் இந்த சம்பவத்திற்கு மன்னிப்புக்கோரும் வகையிலும் தவறை ஈடுசெய்யும் வகையிலும், Flash Coffee நிறுவனம் தனக்கு ஒரு VIP தொகுப்பை வழங்கியதாக ஆலிஸ் தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டார். அதில் இரண்டு வாரங்களுக்கு, தேவையான அளவிலும் சுவையிலும் தினமும் இரண்டு கப் காபி இலவசம் என்று கூறப்பட்டிருந்தது. இருப்பினும், ஆலிஸ் தனக்கு இலவச காபி வழங்குவதில் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை. ஏனெனில் அவர் விரும்பியது Waffleஐ தான். ஆகவே காபிக்கு பதிலாக இரண்டு வாரங்களுக்கு இலவச Waffle கிடைக்குமா? என்று கேட்க முதலில் அது வெளிப்படையாக Flash Coffeeயால் மறுக்கப்பட்டது.
ஆனால் இறுதியில் காபிக்கு பதிலாக இரண்டு வாரங்களுக்கு இலவச Waffle வழங்க ஒப்புக்கொண்டது Flash Coffee, என்றும் அலிஸ் கூறியுள்ளார். மதர்ஷிப்பின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக, சம்பந்தப்பட்ட வாடிக்கையாளருடன் தாங்கள் நெருங்கிய தொடர்பில் இருப்பதாகவும், “நிச்சயமாக அவருக்கு உரிய இழப்பீடு வழங்குவதாகவும்” Flash Coffee கூறியது. மேலும் அதன் உணவுப் பாதுகாப்பு மற்றும் சுகாதார வழிகாட்டுதல்கள் அனைத்து Outletகளிலும் பின்பற்றப்படுவதை உறுதி செய்வோம் என்றும் அந்நிறுவனம் கூறியது.