TamilSaaga

“சிங்கப்பூரில் ஆன்லைனில் போலி பொருட்கள் விற்பனை” : அதிரடி சோதனையில் சிக்கிய மூவர்

சிங்கப்பூரில் ஆன்லைனில் போலியான பொருட்களை விற்பனை செய்ததாக கூறப்படும் 30 மற்றும் 45 வயதுக்கு உட்பட்ட மூன்று பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். “சட்டவிரோதமான ஆன்லைன் சூதாட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இந்த மூன்று ஆண்களில் ஒருவர் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்” என்று சிங்கப்பூர் காவல் படை (SPF) இன்று புதன்கிழமை (அக்டோபர் 27) வெளியிட்ட ஒரு ஊடக அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

கடந்த திங்கள்கிழமை ஜாலான் சுல்தான், உட்லண்ட்ஸ் சர்க்கிள் மற்றும் பெடோக் ரிசர்வாயர் ரோடு ஆகிய இடங்களில் சோதனை நடத்தப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். “இந்த அதிரடி நடவடிக்கையின் போது, ​​கணினிகள், மொபைல் போன்கள் மற்றும் 600-க்கும் மேற்பட்ட வர்த்தக முத்திரையை மீறும் பொருட்கள், ஆடைகள், பைகள் மற்றும் பாகங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன,” என்று போலீசார் தெரிவித்தனர். மேலும் கைப்பற்றப்பட்ட பொருட்களின் மதிப்பு சுமார் 1,70,000 வெள்ளிக்கும் அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அனைத்து வகையான சட்டவிரோத சூதாட்ட நடவடிக்கைகள் மற்றும் அறிவுசார் சொத்துரிமை மீறல் ஆகியவற்றிற்கு எதிராக அவர்கள் தீவிரமான நடவடிக்கைகள் எடுப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சட்டவிரோத ரிமோட் சூதாட்ட சேவைகளை வழங்குவதில் குற்றவாளியாகக் கண்டறியப்பட்ட எவருக்கும் 20,000 முதல் 5,00,000 வெள்ளி வரை அபராதம் மற்றும் அல்லது ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். பொய்யாகப் பயன்படுத்தப்பட்ட வர்த்தக முத்திரையுடன் பொருட்களை விற்பது அல்லது விநியோகிப்பது போன்ற குற்றவாளிகளுக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, 1,00,000 வெள்ளி வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

Related posts