அன்னையை போல ஒரு தெய்வம் இல்லை என்பார்கள், அது உண்மை என்பதை உணர்த்திய சம்பவங்கள் கோடி உண்டு இந்த உலகில். அந்த வகையில் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தாயான சிங்கப்பூர் பெண் ஒருவர் இரத்தக் குழாயில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக திடீரென காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது.
தந்தை இல்லாமல் ஒற்றை தாயாக மூன்று பிள்ளைகளை வளர்த்த அந்த பெண்மணி வாங் ஹுய்ஹுய், ஜூலை 15 அன்று மரணித்தார். தலைவலி, கழுத்தில் வலி மற்றும் ரத்த குழாய் பிரச்சனையால் போராடி வந்த அவர் வீட்டில் இரண்டு நாட்கள் இருந்த நிலையில் காலமானார்.
என்ன நடந்தது?
இறந்த அந்த தாயின் 21 வயது மகள் சீன செய்தி நிறுவனம் ஒன்றிடம் கூறியதாவது, கடந்த ஜூலை 12 அன்று மாலை 5 மணிக்கு தனது தாய் வேலையிலிருந்து வீட்டிற்கு வந்ததாகவும், தனக்கு காய்ச்சல் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
மருத்துவரிடம் சென்றால் செலவாகும் என்பதால் அவர் தானாகே சில மருந்துகளை உட்கொண்ட பிறகு அவருக்கு காய்ச்சல் குறைந்துள்ளது. என்று அந்த மகள் கூறினார். இந்நிலையில் அன்று அதிகாலை 3 மணியளவில், வாங் தனது கழுத்தில் தாங்க முடியாத வலியை உணர்ந்தார்.
இறுதியில் அதிகாலை 5 மணியளவில், அவர் வீட்டில் வாந்தி எடுக்கத் தொடங்கி சிறிது நேரத்திலேயே மயக்கமடைந்துள்ளார். பயந்த குடும்பத்தினர் உடனடியாக ஆம்புலன்சை அழைத்துள்ளனர். அவருடைய மகளுக்கு CPR பயிற்சி இருந்ததால் ஆம்புலன்ஸ் வரும் முன் அன்னைக்கு CPR அளித்துள்ளார்.
இருப்பினும் அவர் மயக்கத்தில் இருந்து எழவில்லை என்பதால் அவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் கடந்த ஜூலை 15ம் தேதி மரணித்துள்ளார்.
வாங் என்ற அந்த இறந்த பெண்மணி தனது குடும்பத்திற்காக கடுமையாக உழைத்தவர், அவர் முழுநேர நிர்வாகப் பணியை மேற்கொண்டதாகவும், மேலும் வாரத்தில் மூன்று நாட்கள் பப்பில் உதவியாளராகப் பகுதி நேரமாகவும் பணியாற்றியதாகவும் சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விடியற்காலையில் வேலைக்கு சென்றால் இரவு 1 மணிக்கு தான் வீட்டுக்கு வருவார் என்று, அவருக்கு மூன்று குழந்தைகள் பிறந்தவுடன் தனது கணவரை விவாகரத்து செய்துள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும் அவர் மகள் அளித்த தகவலின்படி, மற்றவர்களுக்கு உதவுவதற்காக அவரது உடல் உறுப்புகளை தானம் செய்யும்படி அவரது தாயார் குடும்பத்திற்கு அறிவுறுத்தினார் என்றும் கூறப்படுகிறது.
தனது இறப்பிலும் கூட இந்த உலகிற்கே உதவ வேண்டும் என்ற சிறந்த உள்ளம் அந்த தாய்க்கு இருந்துள்ளது. கணவன் இல்லாமல் தனி ஒருத்தியாக தனது மூன்று பிள்ளைகளை வளர்த்து இப்பொது தனது உடலையும் தானம் செய்துள்ள இந்த தெய்வ தாய்க்கு இணை அவரே..