TamilSaaga

சிங்கப்பூரில் SMS மூலம் புதுவித மோசடி – மக்களை உஷார்படுத்தும் போலீஸ்

வங்கி தொடர்பான மோசடிகள் தற்போது பல முறைகளில் மாற்றம் பெற்றுக் கொண்டே இருக்கிறது. இந்நிலையில் குறுஞ்செய்தி எனப்படும் எஸ்எம்எஸ் மூலமாக புதுவித மோசடிகள் தற்போது உருவெடுத்துள்ளன.

வங்கி நிறுவனங்களைப் போலவே குறுஞ்செய்திகளை அனுப்பி பொது மக்களை ஏமாற்றும் முயற்சியில் மோடி கும்பல் தற்போது செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சிங்கப்பூரில் இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் மட்டும் இதுபோன்ற 374 சம்பவங்கள் பதிவாகி உள்ளது.

இந்த ஒட்டுமொத்த சம்பவங்களில் பொதுமக்கள் மொத்தமாக 1.7 மில்லியன் வெள்ளி அளவு பணத்தை ஏமாந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் வங்கியில் இருந்து வருவது போல் ஒரு போலி குறுஞ்செய்தி வருகின்றது.

அதில் வாடிக்கையாளர்கள் கணக்கில் சந்தேகத்திற்குரிய பணபரிமாற்றம் நடந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது. வாடிக்கையாளர்கள் அந்த பண பரிமாற்றத்தை செய்யாத நிலையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையத்தை தொடர்பு கொள்ளுமாறு கூறப்படுகிறது. வங்கியின் இணைய சேவையை போலவே காட்சியளிக்கும் அந்த பக்கத்தில் தனிநபர் தகவல்கள், வங்கி கணக்கு தகவல்கள் கேட்கப்படுகின்றன.

அனைத்தையும் பூர்த்தி செய்வதன் மூலம் வாடிக்கையாளர்கள் ஏமாற்றப்படுகின்றனர். இந்நிலையில் சந்தேகத்திற்குரிய வகையில் குறுஞ்செய்தி வந்தால் அந்த எண்ணிற்கு அழைக்கவோ அதில் உள்ள இணைய முகவரியை தொடர்புகொள்ளவோ வேண்டாம் என்று காவல்துறை தற்போது எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related posts