TamilSaaga

புலம்பெயர் தொழிலாளர்களின் தங்குமிடங்களை தரம் உயர்த்தச் சொல்லும் சிங்கப்பூர் அரசு – உரிமையாளர்கள் சொல்வதென்ன?

சிங்கப்பூரில் Dorm – Dormitory என்று அழைக்கப்படும் புலம்பெயர் வெளிநாட்டு தொழிலாளர்கள் தங்கும் இடங்களின் தரத்தினை உயர்த்தச் சொல்லி, புதிய வழிமுறைகளை வழங்கியிருக்கிறது சிங்கப்பூர் அரசாங்கம். தொற்று சிங்கப்பூரில் பரவத் தொடங்கிய நேரத்தில், அதன் பரவல் அதிவேகம் பெற்றதும், அதிக எண்ணிக்கை நோயாளிகளைக் கொண்டிருந்ததும் இந்த Dormitoryகளில் தான் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அந்த அனுபவத்தின் அடிப்படையில் மீண்டும் வெளிநாட்டுத் தொழிலாளர்களை வரவேற்க தொடங்கியிருக்கும் சிங்கப்பூர் அவர்களின் தங்குமிடங்களை தரம் உயர்த்தவும், தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகளை அதிகமாக்கவும் முடிவெடுத்திருக்கிறது.

அதன் ஒரு பகுதியாகத்தான் Kranji மற்றும் Jalan Tukang இரண்டு இடங்களிலும் அரசே அமைப்பதாக அறிவித்திருக்கும் இரண்டு புதிய PBD எனப்படும் ( Purpose – Build Dormitories ) தங்குமிடங்கள் . அதைத்தொடர்ந்து மற்ற தங்குமிட ஆப்பரேட்டர்களும், விடுதி நடத்துபவர்களும் எல்லா dormitories ஐயும் புதுப்பிக்க வேண்டிய ஒரு சூழல் அமைந்திருக்கிறது. இதைப் பற்றிய அவர்களது கருத்து என்ன?

சிங்கப்பூரின் சில பெரிய, முக்கிய தங்குமிடங்களின் உரிமையாளர்கள், புலம்பெயர் தொழிலாளர்களை அதிகம் கொண்டுள்ள நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பாளர்கள், சில புலம்பெயர் தொழிலாளர் அமைப்புகளின் கருத்துக்கள் இங்கே பதிவு செய்யப்படுகிறது.

அரசாங்கம் அறிவித்திருக்கும், ஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனி கழிவுநீர் பாதைகள் அமைப்பது என்பது போன்ற இந்த புதிய தரம் உயர்த்தலுக்கான வழிமுறைகள் அதிக செலவு பிடிக்கக் கூடியதாக உள்ளது. இந்த புதிய தரம் உயர்த்துதலுக்கான எல்லா வழிமுறைகளையும் பயன்படுத்தி அரசு தான் அமைக்க இருக்கின்ற இரண்டு PBD யை அமைத்தாலும் அந்தப் பின்னணியில் மற்ற Dorm உரிமையாளர்களுக்கு செலவுகள் அதிகமாவதோடு,Dorm களை குத்தகைக்கு எடுத்தவர்கள் இன்னும் அதிகமான நிதிச்சுமைக்கு உள்ளாக நேரிடும்.இந்த தரம் உயர்த்துவதற்கு அதிகமாக தேவைப்படும் நிதியானது தங்குமிட உரிமையாளர்கள், முதலாளிகள்,அரசாங்கம்,தொழிலாளர்கள் ஆகியோரால் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும்.மேலும் புதிய வசதிகள் , தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள பழைய தங்குமிடங்கள் எந்த அளவு மறு சீரமைக்கப்பட வேண்டும் என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும்.தேவையான பணம் செலவு செய்யப்பட்டாலும் தரமான தங்குமிடங்கள் மற்றும் சரியாக பராமரிப்பது போன்றவை முழுதும் நிறைவேறிவிடுமா என்பதையும் உறுதிபடுத்த வேண்டும் என்று குறிப்பிடுகிறார் Westlite Brand க்கு எட்டு Dorm களை நிர்வகித்து வரும் Centurion Corporation னின் தலைமை நிர்வாகி திரு.காங் சீ மின்.

புதிய தரமுயர்த்தல் வழிமுறைகளில் அறைகளோடு இணைந்த கழிப்பறைத் தொகுப்புகள் அமைப்பது என்பது மிகவும் சவாலான ஒன்றாகவே அமையும்,ஒரு கழிப்பறை அமைக்க ஏரக்குறைய $30000 ஆகும், அப்படியானால் 20 முதல் 30 வரையிலான எண்ணிக்கை கொண்ட சிறிய அளவிலான Dormitory வைத்திருப்பவர்களுக்கு இது மிகப் பெரிய செலவாக அமையக் கூடும். இது போன்ற புதிய வழிமுறைகளில் ஏற்படும் அதிகப்படியாக ஏற்படும் செலவுகளுக்கு அரசாங்கம் உதவி செய்ய வாய்ப்புள்ளதாக கேள்விப்படுகிறோம்.அப்படி அரசாங்கத்திடம் இருந்து உதவி கிடைக்கும் பட்சத்தில் உடனடியாக புதுப்பிக்கும் வேலைகளை தொடங்குவது தான் எங்கள் விருப்பமும் என்று RT குழுமத்தின் இயக்குனர் திரு.யூஜின் ஆவ் குறிப்பிடுகிறார்.

சிங்கப்பூர் டார்மிட்டரி அசோசியேஷன் தலைவரும், S11 டார்மிட்டரி நிர்வாக இயக்குனருமான திரு. ஜோனத்தான் சேயா குறிப்பிடும் போது, இந்த புதிய தரநிலைகள் செயல்படுத்தப்பட சங்கம் முழுதாக உதவி செய்யும்.இந்த மாற்றங்களை வரவேற்று முழுதாக நடைமுறைபடுத்த மனநிலை மாற்றமும் தேவை.புலம் பெயர் தொழிலாளர்களின் தங்குமிடங்கள் மறுசீரமைப்பு செய்யப்படுவதற்கு உதவியாக அவர்களின் வாழ்க்கைப் பழக்கத்தை புரிந்து கொள்ளவேண்டும். அதற்கான ஒரு ஆய்வை சங்கம் மேற்கொள்ளும் என்று இதன் இன்னொரு பக்கம் பற்றி பதிவு செய்கிறார்.

கட்டுமான நிறுவனமான Kori Holdings-ன் தலைமை நிர்வாகி திரு. ஹூய் யூ கோஹ் அவர்கள், தொழிலாளர் நலனுக்காக இன்னும் கொஞ்சம் கூடுதலாக பணம் செலவழிப்பது ஒன்றும் தவறில்லை, இப்போதே நாங்கள் 170 புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மாதம் $350 செலவாகிறது.அதிகபட்சமாக மாதம் $400 வரை கொடுக்கலாம்.தொழிலாளர்களின் தங்குமிடங்கள் தரம் உயர்த்தப்பட வேண்டியது காலத்தின் தேவையும் கூட என்று தனது கருத்துக்களை பதிவு செய்கிறார்.

புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் உரிமை குழு துணைத் தலைவர் திரு. அலெக்ஸ் அவு அவர்கள் கூறும்போது, இந்த புதிய வழிமுறைகள் எல்லா சிறிய,பெரிய தங்கும் இடங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்றும், ஒரு அறைக்கு 12 தொழிலாளர்கள் என்பது இன்னும் கூட மாற்றி அமைக்கப்படலாம் என்றும், கோவில் தொற்றுக்கு முன்னரே நிறைய அறைகள் ஒரு அறைக்கு 12 தொழிலாளர்கள் வீதம் தான் செயல்பட்டன, 16 முதல் 20 வரை தொழிலாளர்கள் தங்கியிருந்த அறைகளும் இருந்தன. இந்த எண்ணிக்கை குறைக்கப் படாமல் இருப்பதும், இந்த தங்குமிடங்கள் சீரமைத்தலில்ஆக்கிரமிப்பு கட்டமைப்புகளும் கூடுதல் கவனிப்பு பெறவேண்டும் என்னும் சில எதார்த்தமான சிக்கல்களை பதிவு செய்கிறார்.

தொலைதூரத்தில், வேலை ஒன்றை மட்டும் மையப்படுத்தி உழைத்துக் கொண்டிருக்கும் தொழிலாளர்களின் தங்குமிடங்கள் தரம் உயர்வது அவர்களுக்கு ஒரு சிறு ஆறுதல் தானே.

Related posts