TamilSaaga

சிங்கப்பூர் பிரீமியர் லீக் : கால்பந்து ரசிகர்களுக்கு ஓர் மகிழ்ச்சி செய்தி – முழு விவரம்

SPL எனப்படும் சிங்கப்பூர் பிரீமியர் லீக் (SPL) போட்டிகளில் இன்று வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 13) முதல் அதிகபட்சமாக 500 பார்வையாளர்கள் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள். இது முன்பிருந்த 100 என்ற வரம்பிலிருந்து அதிகரிப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த அளவு வரும் ஆகஸ்ட் 19ம் தேதி முதல் 1,000 ஆக அதிகரிக்கப்படும் என்று சிங்கப்பூர் கால்பந்து சங்கம் (FAS) நேற்று வியாழக்கிழமை வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் 7ம் தேதி ஸ்போர்ட் சிங்கப்பூர் அறிவித்த வழிகாட்டுதல்களின்படி 100ல் இருந்து 500 ஆக அதிகரிப்பது, பாதுகாப்பான மேலாண்மை நடவடிக்கைகளை அளவீடு செய்து தளர்வுகளுக்கான அரசாங்க உத்தரவுக்கு இணைங்கித்தான் என்றும் FAS தெரிவித்துள்ளது.

ரசிகர்கள் போட்டி நடைபெறும் இடங்களுக்கு நுழைவதற்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டதற்கான சான்று அல்லது எதிர்மறை ஆன்டிஜென் விரைவு சோதனை (ART) முடிவுகள் கண்டிப்பாக தேவைப்படும் என்பது நினைவுகூரத்தக்கது.

தற்போது தேசிய நோய்த்தடுப்பு திட்டத்தின் கீழ் சிங்கப்பூரில் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளான, ஃபைசர்-பயோஎன்டெக்/கொமர்னாட்டி மற்றும் மாடர்னா தடுப்பூசிகள், அதே போல் உலக சுகாதார அமைப்பின் (WHO) அவசர பயன்பாட்டு பட்டியலின் கீழ் உள்ள சினோவாக், சினோஃபார்ம் மற்றும் அஸ்ட்ராஜெனெகா ஆகியவை அடங்கும்.

தடுப்பூசி போடப்பட்ட ரசிகர்கள் தங்கள் இரண்டாவது டோஸைப் பெற்ற பிறகு குறைந்தது 14 நாட்களுக்குப் பிறகுதான் போட்டி நடைபெறும் இடங்களுக்குள் நுழைய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts