சிங்கப்பூரை பொறுத்தவரை, பணியிடங்களில் விபத்து நடைபெறும் செய்திகள் அவ்வப்போது நம் செவிகளுக்கு வந்த வண்ணம் தான் உள்ளன. அதிலும், குறிப்பாக சொல்லப்போனால் கட்டுமான பணிகளில் ஏற்படும் விபத்துக்கள் ஏராளம். எனவே தொழிலாளர்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், அரசு ஏற்கனவே ஒன்பது மாத கால விழிப்புணர்வு காலம் கடைபிடிக்கப்படும் என்று அறிவித்திருந்தது. அதன்படி, மே மாதம் 31ம் தேதியுடன் விழிப்புணர்வு காலமானது முடிவடைந்தது.
இந்நிலையில், அடுத்த இரண்டு மாதங்களுக்கு தொழிலாளர்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக நிறுவனங்களில் நடைபெறும் சோதனைகள் 50 விழுக்காடு அதிகமாக இருக்கும் என அறிவித்துள்ளது. சோதனைகளில், தொழிலாளிகளின் நலனுக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பாதுகாப்பு விதி மீறல்களில் ஈடுபடும் நிறுவனங்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கட்டுமானம் மற்றும் உற்பத்தி துறைகளில் ஆபத்துக்கள் அதிகம் என்பதால், அது சம்பந்தமான நிறுவனங்களில் சோதனைகளை தொடர்ந்து மேற்கொள்ள நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. எவ்வளவு தான் அரசாங்கம் அறிவிப்பு கொடுத்தாலும், சில நிறுவனங்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை சரியாக கடைபிடிக்காத காரணத்தினால் அரசு தற்பொழுது சோதனைகளை மேலும் தீவிரமாகியுள்ளது.