TamilSaaga

“கத்தி முனையில் சிங்கப்பூர் சைனாடவுனில் கொள்ளை” : போலீசாரின் அதிரடி நடவடிக்கை – ஒருவர் கைது

சிங்கப்பூர் சைனாடவுனில் கொள்ளையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்பட்ட 37 வயது நபர் கைது செய்யப்பட்டதாக சிங்கப்பூர் போலீஸ் படை (SPF) இன்று சனிக்கிழமை (செப்டம்பர் 25) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை 3.15 மணியளவில் கோயில் தெருவில் உள்ள ஒரு கடையில் ஏற்பட்ட கொள்ளை சம்பவம் குறித்து தங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இதுகுறித்து SPF கூறுகையில், “பாதிக்கப்பட்டவர்களை கத்தியை காட்டி மிரட்டி அவர்களிடம் பணத்தை கொள்ளையடித்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது” என்று SPF தெரிவித்துள்ளது. மேலும் கைதியை காட்டி மிரட்டியதால் “பயத்தால், பாதிக்கப்பட்டவர்கள் அந்த நபரின் அறிவுறுத்தல்களுக்கு இணங்கி, சுமார் 1,000 வெள்ளி பணத்தை ஒப்படைத்தனர்.” அதன்பிறகு பணத்துடன் அங்கிருந்து அவர் தப்பிச்சென்றுள்ளார். அந்த கடைக்காரர்களுக்கு இதனால் உடல்ரீதியாக பாதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

போலீஸ் கேமராக்களின் படங்களின் உதவியுடன் விசாரணைகளைத் தொடர்ந்து, அதிகாரிகள் சந்தேக நபரை லோரோங் 1 டோ பயோவில் கைது செய்தனர். மேலும் இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளார். இந்த குற்றத்திற்கு மூன்று வருடங்களுக்கு குறையாமலும், 14 வருடங்களுக்கு மிகாமலும் சிறை தண்டனையும், குறைந்தபட்சம் 12 தடியடியும் விதிக்கப்படும்.

மேலும் இதுபோன்ற விஷயங்களில் “தகவல் தெரிந்த எவரும் 1800-255-0000 என்ற எண்ணில் போலீஸ் ஹாட்லைனை தொடர்பு கொள்ளவும் அல்லது www.police.gov.sg/i-witness என்ற தலத்தில் தகவல்களை சமர்ப்பிக்கவும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்” என்று SPF தெரிவித்துள்ளது. மேலும் “பெறப்பட்ட அனைத்து தகவல்களும் கண்டிப்பாக ரகசியமாக வைக்கப்படும். தப்பியோடியவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பது கடுமையான குற்றமாகும், சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்பதை காவல்துறை பொதுமக்களுக்கு நினைவூட்ட விரும்புகிறது என்றும் SPF தெரிவித்தது.

Related posts