TamilSaaga

“TITAN” எனும் சகாப்தத்தை உருவாக்கிய தமிழர் – இன்று வரை வெளிநாட்டு நிறுவனங்களால் அசைத்துக் கூட பார்க்க முடியாத “உச்சம்”

டாடாவின் வாட்ச் தயாரிப்பு நிறுவனமான டைட்டன் உருவாக்கத்தில் முக்கியமான பங்கு வகித்தவர் ஒரு தமிழர் என்பது தெரியுமா?… எந்த சூழ்நிலையில் எப்படி உருவானது டைட்டன்… நஷ்டத்தில் இருந்த ஒரு கம்பெனியை மீட்க உருவான ஐடியா எப்படி சக்ஸஸ்ஃபுல்லானது?

டாடா பிரஸ்

சுதந்திரத்துக்கு முன்பே இந்தியாவில் பெரிய நிறுவனமாகப் பல்வேறு தொழில்களில் கிளைபரப்பி ஆலமரமாக இருந்த நிறுவனம் டாடா. எவ்வளவு பெரிய நிறுவனத்துக்கும் ஒரு சின்ன சறுக்கல் ஏற்படும் என்ற மார்க்கெட் நிலவரத்தின்படி டாடா குழுமத்தின் ஒரு அங்கமாக இருந்த 1970-களில் டாடா பிரஸ் நிறுவனம் பயங்கரமான நஷ்டத்தில் இருந்தது. காலெண்டர்கள், டைரிகள், அரசின் ஒரு சில ஆவணங்களை பிரிண்ட் செய்து வந்த அந்த நிறுவனத்தால் சந்தையில் தாக்குப்பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்தநிலையில், டாடா பிரஸ் நிறுவனத்துக்குப் பதிலாக வேறொரு நிறுவனத்தில் முதலீடு செய்ய டாடா குழுமம் திட்டமிட்டது. இதற்காக கம்ப்யூட்டர் துறையில் வல்லுநரான அனில் என்பவரை அந்த நிறுவனம் அணுகியது. அதேபோல், சந்தை நிலவரம் மற்றும் திட்டமிடுதலில் முதிர்ந்த அனுபவம் பெற்றிருந்த ஜெர்சஸ் தேசாய் என்பவர் டாடா குழுமத்தின் புதிய தொழில் வாய்ப்புகளை ஆய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்டார்.

ஐராவதம் மகாதேவன்

தமிழக கேடர் ஐ.ஏ.எஸ் அதிகாரியான ஐராவதம் மகாதேவன், அப்போது இந்திய அரசின் தொழில்துறை செயலாளராக இருந்தார். அதேநேரம், பணியில் இருந்து விடுமுறை எடுத்துக் கொண்டு சிந்து சமவெளி நாகரிகம் குறித்து ஆய்வு செய்யும் பணிகளிலும் அவர் ஈடுபட்டிருந்தார். மும்பையில் இருந்த டாடா நிறுவனத்தின் ‘Tata Institute of Fundamental Research (TIFR)’ ஆய்வு மையத்தில் இருந்த வசதிகளைத் தனது ஆய்வுப் பணிகளுக்காகப் பயன்படுத்திக் கொண்டிருந்தார். இதனால், அவரோடு அணில் மற்றும் தேசாய் ஆகியோருக்குப் பழக்கம் ஏற்பட்டிருந்தது. இந்தப் பழக்கத்தின் மூலம் தேசாய், அவரிடம் டாடா குழுமத்தின் புதிய தொழில் வாய்ப்புகள் பற்றி ஆலோசானை செய்திருக்கிறார். ஒரு கட்டத்தில் அணிலை டெல்லியில் உள்ள தனது அலுவலகத்தில் வந்து சந்திக்கும்படி சொல்லியிருக்கிறார் ஐராவதம் மகாதேவன்.

மேலும் படிக்க – சிங்கப்பூரில் மற்றொரு துக்க செய்தி: பணியிடத்தில் தவறி விழுந்த வெளிநாட்டு ஊழியர் மரணம்

1970-களின் இறுதியில் ஐராவதம் மகாதேவனை அணில், அவரது டெல்லி அலுவலகத்தில் சந்தித்திருக்கிறார். இந்திய அரசின் தொழில்துறை செயலாளராக இருந்த அவர், டாடா குழுமத்துக்குப் பல்வேறு தொழில் வாய்ப்புகள் குறித்தும் ஆலோசனை சொல்லியிருக்கிறார். ஆரம்பத்தில், துறைமுகங்களில் பயன்படுத்தப்படும் கண்டெய்னர்கள், பிரிண்டிங்கில் பயன்படுத்தப்படும் கார்பன் பிளாக் போன்றவை தயாரிப்பில் ஈடுபடலாம் என்று ஆலோசிக்கப்பட்டது. ஆனால், ஐராவதம் மகாதேவன், டாடா போன்ற பெரிய நிறுவனம் வாட்ச் தயாரிப்பில் இறங்கினால் சாதிக்க முடியும் என்று ஆலோசனை கூறினார். இவர்களது ஆலோசனை முடிவில் 5 தொழில்களை அணில் தேர்வு செய்திருந்தார். அவற்றில் வாட்ச் தயாரிப்பும் ஒன்று. அங்கிருந்து தேசாய்-க்கு போன் செய்து இந்தத் தகவலை அணில் சொல்லியிருக்கிறார்.

டைட்டன் உருவாக்கத்தில் டிட்கோவின் பங்கு

இந்த சூழலில் தமிழ்நாடு தொழில்வளர்ச்சிக் கழகமான டிட்கோவின் தலைவராக 1979-ல் ஐராவதம் மகாதேவன் நியமிக்கப்பட்டார். அவர் தமிழகம் வந்த நிலையில், ஜெர்சஸ் தேசாய் சென்னையில் அவரைச் சந்தித்துப் பேசினார். அப்போதைய சூழ்நிலையில், ஹெச்.எம்.டி தவிர வாட்ச் தயாரிப்பில் இந்திய நிறுவங்கள் பெரிதாக ஈடுபடவில்லை. அப்போது, சிட்டிசன் உள்ளிட்ட பெயர்களில் வெளிநாட்டு நிறுவனங்கள் வாட்ச் தயாரிப்பில் ஈடுபட்டு வந்தன. இதையும் சுட்டிக் காட்டி வாட்ச் தயாரிப்பில் ஈடுபட வலியுறுத்தினார் மகாதேவன். இந்த ஆலோசனைக்கு டாடா நிர்வாகக் குழுவும் ஒரு கட்டத்தில் ஒப்புதல் அளித்தது. ஆனால், வாட்ச் தயாரிப்பில் டாடா குழுமம் ஈடுபடுவதில் இன்னொரு சிக்கலும் அப்போது இருந்தது. அப்போது இந்தியாவில் அமலில் இருந்த தொழிற்கொள்கைகளின்படி, வாட்ச் தயாரிப்பு என்பது சிறு குறு தொழில் பிரிவில் இருந்தது. டாடா போன்ற பெரிய நிறுவனங்கள் வாட்ச் தயாரிப்பில் ஈடுபட முடியாத நிலை இருந்தது. இதற்கும் ஐராவதம் மகாதேவன் ஒரு தீர்வு சொன்னார்.

மேலும் படிக்க – சிங்கப்பூர் – திருச்சி.. அடுத்த ஒரு மாதத்திற்கு வழக்கத்தை விட “இருமடங்கு” அதிகரித்துள்ள விமான டிக்கெட் விலை!

அதாவது, டாடா குழுமம் டிட்கோவுடன் பாட்னர்ஷிப் அமைத்து வாட்ச் தயாரிப்பில் ஈடுபடலாம் என்று சொன்னார். இதையடுத்து, டாடா இண்டஸ்ட்ரீஸ் என்பதன் அடையாளமாக ‘TI’, தமிழ்நாடு என்பதன் அடையாளமாக ’TAN’ சேர்த்து ‘TITAN’ நிறுவனம் உருவானது. 1984-ல் டைட்டன் நிறுவனம் தொடங்கப்பட்ட நிலையில், 1987-ல் தமிழ்நாட்டின் ஓசூரில் தொழிற்சாலை அமைக்கப்பட்டது. 1987-ல் தொழிற்சாலையில் உற்பத்தி தொடங்கப்பட்டு வாட்ச் விற்பனை தொடங்கியது. முதல் நாளில் 34 வாட்சுகள் விற்பனையான நிலையில், முதல் ஆண்டு முடிவில் 3 லட்சத்துக்கும் மேலான வாட்சுகளை டைட்டன் விற்பனை செய்திருந்தது. இன்றைய சூழலில் உலக அளவில் நான்காவது மிகப்பெரிய வாட்ச் தயாரிப்பு நிறுவனம் என்றால் டைட்டன்தான். அதேபோல், டைட்டன் நிறுவனத்தில் டிட்கோவின் பங்கு மதிப்பு மற்றும் 6,500 கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்திருக்கிறது.

டாடா போன்ற பெரிய நிறுவனம், வாட்ச் தயாரிப்பில் ஈடுபட முக்கியமான காரணம் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஐராவதம் மகாதேவன்தான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts