சிங்கப்பூரில் உள்ள போட்டோங் பசீர் என்ற இடத்தை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவர் வயிற்று வலி காரணமாக கழிவறைக்கு சென்றுள்ளார். குழந்தை பிறப்பதற்கு இன்னும் மூன்று நாட்கள் இருக்கும் நிலையில், இவர் வயிற்று வலி என்று கூறியுள்ளார். சாதாரண வயிற்று வலி என்று முதலில் நினைத்த கணவர், கழிவறையிலிருந்த தனது மனைவியின் கூக்குரலைக் கேட்டு, நிலைமையை உணர்ந்து, மருத்துவ அவசர ஊர்திக்கு உடனடியாக அழைப்பு விடுத்துள்ளார்.
இதையும் படியுங்கள் : “தென்கிழக்கு ஆசியாவிற்கு முன்னோடியான சிங்கப்பூர்”
மேலும் தங்கள் 2 வயது குழந்தையை பார்த்துக்கொள்வதற்காக அருகில் வசிக்கும் தன்னுடைய மாமியாரையும் தொலைபேசி மூலம் அழைத்துள்ளார். அவசர ஊர்தியும் மாமியாரும் வரும் முன்பே, கழிவறைக்குள் இருந்த தனது மனைவி, குழந்தையின் தலை தெரிவதாக கூக்குரலிட்டதை கேட்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக, அவரை பாதுகாப்பான ஒரு அறைக்கு தூக்கி சென்று தானே பிரசவம் பார்த்துள்ளார். குழந்தையையும் தாயையும் பத்திரமாக காப்பாற்றியுள்ளார்.
சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு விரைந்து வந்த மாமியார், குழந்தையும் தாயும் பத்திரமாக இருப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்துள்ளார். மேலும் இவர்களுக்கு அவசர சிகிச்சை அளிப்பதற்காக மூன்று மருத்துவர்கள் அவருடைய இல்லத்திற்கு விரைந்துள்ளனர். குழந்தையும் தாயும் பாதுகாப்பாக இருப்பதைக் கண்ட அவர்கள், மேற்படி சிகிச்சைக்காக கே.கே. பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் இருவரையும் சேர்த்துள்ளனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பெண்ணின் தாயார், வாகனங்களில் பயணிக்கும்போது சில பெண்களுக்கு குழந்தை பிறந்ததாக தான் செய்திகளில் கேள்விபட்டுள்ளதாகவும், ஆனால் தனது மகளுக்கே இப்படி ஒரு நிலைமை ஏற்படும், என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். வீட்டிலேயே தாயும் குழந்தையும் பத்திரமாக பார்த்துக்கொண்ட மருமகனை பாராட்டிய மாமியார் இந்த சம்பவத்தை ஒரு மிகப்பெரிய இன்ப அதிர்ச்சி என்றும் கூறியுள்ளார்.